Breaking News

வட மாகாண முதலமைச்சரை அவமானப்படுத்த வேண்டாம்

மாவட்ட அபிவிருத்தி குழுவிற்கு தலைமை தாங்குவோர் தொடர்பில் இன்றைய அரசு கொண்டிருக்கும் நிலைப்பாடு தமிழ்மக்களின் மனநிலைக்கு மாறானது என வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்துள்ளார். 

ஏழாலை கண்ணகியம்மன் சனசமூக நிலையத்தில் இடம்பெற்ற கலை விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் அவர்களுடைய அபிவிருத்தி, நிர்வாகம் சார்ந்த செயற்பாடுகளை கண்காணித்து ஒழுங்குபடுத்தி விரைவுபடுத்தும் பொறுப்பு மாவட்ட அபிவிருத்தி குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், நல்லாட்சி என்ற போர்வையில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய அரசாங்கம் அபிவிருத்திக குழுவின் தலைமை குறித்து நடந்துகொள்கின்ற முறை சிக்கலை தோற்றுவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாமை, வலி.வடக்கு உட்பட்ட உயர்பாதுகாப்பு வலயங்கள் தொடர்ச்சியாக காணப்படுகின்றமை தமிழ் மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தையே தந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கங்கள் நடந்து கொண்ட விதத்திலும் பார்க்க, நல்லாட்சி அரசு தமிழ் மக்களின் விருப்பங்களுக்கு எதிராக நடந்துகொள்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைமை என்ற போர்வையில் அரசாங்கத்தால் அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சரான, திருமதி விஜயகலா மகேஸ்வரன் நியமிக்கப்பட்டதையும் அவர் ஞாபகப்படுத்தியுள்ளார்.

இது மக்களின் ஆதரவைப்பெற்ற வட மாகாண முதலமைச்சரை அவமானப்படுத்தும் ஓர் விடயம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.