Breaking News

சம்பந்தன் – விக்கி முரண்பாடு: இந்தியாவுக்கு என்ன திடீர் அக்கறை?

கடந்த வாரம் யாழ்ப்பாணம் வந்த இந்திய உயர் ஸ்தானிகர் சின்ஹா, தன்னுடைய விஜயத்தில் அதிக நேரத்தை செலவிட்டது முதலமைச்சர் விக்கினேஸ்வரனுடன்தான்.

சுமார் இரண்டு மணிநேரத்துக்கும் அதிகமாக இருவரும் தனிமையில் உரையாடியதாகவும், மனம் திறந்து பலவிடயங்கள் பரிமாறப்பட்டதாகவும் யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பந்தன், சுமந்திரனுடனான முரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவாருங்கள், தனியாகப் பிரிந்து செல்ல வேண்டாம் என்ற இரண்டு விடயங்களையும் சின்ஹா உறுதியாக வலியுறுத்தியிருந்தார் என்பதை நாம் முந்திக்கொண்டு தந்திருந்தோம்.

பிரிந்து செல்ல வேண்டாம் என்பதை வலியுறுத்திய போது, சின்ஹா சுட்டிக்காட்டிய மற்றொரு விடயம் செய்திகளில் பெரிதாக அடிபடவில்லை. “இனப்பிரச்சினைக்கு சில மாதங்களுக்குள் தீர்வு வரப்போகுது. இந்த நேரத்தில் நீங்கள் பிரிந்து செல்வது நல்லதல்ல” என்பதை ஸ்தானிகர் சுட்டிக்காட்டினார்.

அதென்ன தீர்வு என்பதையிட்டு முதலமைச்சர் கேட்டிருந்தாரோ தெரியவில்லை, ஆனால், அது குறித்த சில தகவல்கள் இப்போது கசிந்துள்ளன.

இனநெருக்கடிக்கான அரசியல் தீர்வு என்ற பெயரில் ‘திட்டம்’ ஒன்று இப்போது தயாரிக்கப்படுகின்றது. இதில் சந்திரிகா – ரணில் – சம்பந்தன்- சுமந்திரன் ஆகியோருடன் இந்தியாவின் சம்பந்தமும் இருப்பதாகச் சொல்லப்படுகின்றது.

இந்தத் தீர்வுத் திட்டத்தை மனதில் வைத்துத்தான், “2016 இல் இனப் பிரச்சினைக்குத் தீர்வு” என சம்பந்தன் அடிக்கடி சொல்லிவருகின்றார்.

இவற்றிலிருந்து மூன்று விடயங்கள் தெளிவாகின்றது: ஒன்று – “தீர்வு” என்ற பெயரில் ஏதோ ஒன்று முன்வைக்கப்படப்போகின்றது. இரண்டு – இந்தியாவும் இதற்கு அநுசரணை வழங்கப்போகின்றது. மூன்று – கூட்டமைப்பின் தலைமை அதனை ஆதரிக்கப்போகின்றது.

தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதைவிடவும், சிங்களவர்களின் எதிர்ப்பைச் சம்பாதிக்கக்கூடாது என்பதில்தான் “தீர்வு”த்திட்டத்தை தயாரிப்பவர்கள் கவனமாகவுள்ளனர். இல்லையெனில் மகிந்த ராஜபக்‌ஷ தரப்பு அதனைப் பயன்படுத்தி பலமாகிவிடும் அரச தரப்பினரிடம் காணப்படுகின்றது.

இந்த நிலையில் கூட்டமைப்பின் பலமான ஒரு பிரிவு தனித்துச் சென்றுவிட்டால் நிலைமை மோசமாகிவிடும். “தீர்வு”க்கு தமிழர் தரப்பிலிருந்து எதிர்ப்புக்கள் வலுக்கும். தமிழகத்திலும் இது எதிரொலித்தால் ‘டில்லி’க்கு நெருக்கடி அதிகரிக்கும்.

முதலமைச்சரை தலைவராக்கி, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள், மற்றும் கஜேந்திரகுமார் ஆகியோரை உள்ளடக்கிய மாற்று அணி ஒன்றை உருவாக்கும் முயற்சி ஒன்று திரை மறைவில் இடம்பெறுகின்றது. ஆனந்தசங்கரியின் அழைப்பும் அந்தப் பின்னணியில்தான் வந்தது.

இவ்வாறான ஒரு “அணி” கூட்டமைப்பை இரண்டாகக் கூறுபோட்டுவிடக்கூடும். சம்பந்தன்- சுமந்திரன் குழுவுக்கு தமிழரசுக் கட்சியில் கூட எதிர்ப்புக்கள் வலுவடைந்துவருகின்றது.

இது தொடர்பில் இந்தியா அதிகளவு கரிசனையுடன் உள்ளது. இந்தப் பிரச்சினையை சம்பந்தன் தீர்த்துவிடுவார் என்றே ‘டில்லி’ நம்பியிருந்தது. ஆனால் அது நடைபெறவில்லை.

இந்தப் பின்னணியில்தான் கூட்டமைப்புக்குள் ஒற்றுமையை ஏற்படுத்த சின்ஹா இப்போது களமிறங்கியிருக்கின்றார். விக்கியுடன் சுமார் இரு மணி நேரம் இது குறித்து சின்ஹா பேசியிருப்பது இந்த விடயத்துக்கு இந்தியா எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றது என்பதைக் காட்டியது.

ஏதோ ஒரு தீர்வைக் கொடுத்து இனப்பிரச்சினையைத் தீர்த்துவிட்டோம் எனக் காட்டிக்கொள்ள வேண்டிய தேவை இந்தியாவுக்கும் உள்ளது. இல்லையெனில் இது புதுவருடத்தில் ஜெனீவாவிலும் எதிரொலிக்கும்.

“தீர்வு விரைவில் வரவுள்ள நிலையில் தனியாகச் செல்லும் முடிவை எடுக்க வேண்டாம்” என்று முதலமைச்சரைக் கேட்டுக்கொண்டதன் மூலம் திரைமறைவில் என்ன நடைபெறுகின்றது என்பதையும் இந்திய உயர் ஸ்தானிகர் இப்போது வெளிப்படுத்தியிருக்கின்றார்.

- பவித்திரன்