Breaking News

தமிழ் மக்களுக்கென தலைமை ஒன்று இல்லை - உரையில் அமைச்சர் ஐங்கரநேசன் முழக்கம்

எவனொருவன் தன் கண் அசைவினால் தன் இனத்தை கட்டுப்படுத்தக் கூடியவனோ அவன்தான் உண்மையான தேசியத்
தலைவன். இவ்வாறானதொரு தலைமை எங்களுடைய தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் போது இருந்தது. ஆனால் தற்போது தமிழ் மக்கள் மத்தியிலிருப்பது கட்சிக்கான தலைவர்களே ஒழிய மக்களுக்கான தலைவர்கள் அல்லர்.

இவர் சொன்னால் மக்கள் கட்டுப்படுவர் என்றளவிற்கு தேசியத் தலைமை யாருமில்லாதது தமிழினத்திற்கு பெரும் சாபக்கேடாகவுள்ளது என வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்.பரமேஸ்வரா வித்தியாலயத்தின் 2015 ஆம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழா நேற்று காலை 9 மணியளவில் திருநெல்வேலியில் அமைந்துள்ள சிவகாமி மஹால் மண்டபத்தில் வித்தியாலய அதிபர் ந.விஜயசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், நாங்கள் நினைத்தால் எதனையும் சாதிக்க முடியும். ஆகவே சிறிய பாடசாலையில் படிப்பதனால் சாதிக்க முடியாது என நினைக்க அவசியமில்லை.

வறுமை இருக்கலாம், நெருக்கடிகள் இருக்கலாம், எங்கள் சக்திக்குட்பட்ட வகையில் எங்கள் பிள்ளைகள் மனதில் ஆழமான நல்ல விடயங்களை புதைக்க வேண்டிய பொறுப்பு எம்மிடமுள்ளது. நாங்கள் வாழ்ந்த காலப்பகுதிகளில் சமூக நெருக்கடிகள் இல்லை. இப்போது சமூகப்புரள்வான நடவடிக்கைகள் அதிகரித்து காணப்படுகின்றது. அப்போது எம்மை தனியாக விடுவதில் எமது பெற்றோர்கள் எவ்விதமான தயக்கங்களையும் காண்பித்தது கிடையாது. ஆனால் இன்று அப்படியல்ல. போருக்கு பின்னர் எங்களுடைய இனத்தை வேகமாக வெவ்வேறு முறையில் கருவறுக்கக் கூடிய நிகழ்ச்சிகள் அரங்கேறுகின்றன.

இது திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலாக இருக்கலாம் அல்லது போருக்கு பிந்தியதொரு சமூகத்தினுடைய வெளிப்பாடாகவும் இருக்கலாம். இதனை நாம் இப்படியே பாராமுகமாக பார்த்துக் கொண்டிருந்தால் எங்கள் பிள்ளைகள் வழிதவறிப் போகின்ற சாத்தியக் கூறுகள் உள்ளன. ஆகவே எங்கள் குழந்தைகளை இது போன்ற தவறான நடவடிக்கைளில் ஈடுபட்டு புரள்வான பாதையில் செல்வதனை தடுத்து முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களிலும் பார்க்க பெற்றோர்களுக்ளகுண்டு.

ஆசிரியர்கள், மாணவர்களை கண்டித்தால் இதன் மீதான விமர்சனங்களை மாணவர்கள் மீது முன்வைப்பதனை நிறுத்த வேண்டும். அன்று எங்களுடைய ஆசிரியர்கள் எங்களை தண்டித்ததால்தான் இன்று நாங்கள் உயர்ந்த நிலையிலிருக்கின்றோம். ஆகவே ஆசிரியருக்கு மாணவர்கள் பயப்படுவதற்கு கற்றுக்கொடுங்கள். ஒரு சமூகம் தவறான பாதையில் செல்லாதிருப்பதற்கு பயம் ஒன்று அவசியம். இப்போது நடக்கின்ற பிறள்வான சமூகவிரோத செயல்கள் எல்லாம் தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் நடந்தது கிடையாது என்று சொல்கின்றார்கள்.

மாணவர்கள் இறைவனுக்கு, பெற்றோர்களிற்கு, ஆசிரியர்களிற்கு பயப்படவேண்டும். இவர்கள் எல்லாருக்கும் அப்பால் நாட்டை ஆளும் தலைமைக்கு பயப்பட வேண்டும். எத்தகைய தலைமைக்கு அப்பயம் வரும்? அந்தத் தலைமை தன்னளவில் நேர்மையாக விருக்க வேண்டும். நான் இன்று அரசியல் கட்சியொன்றின் பிரதிநிதியாகத்தான் மாகாணசபையில் இருக்கின்றேன். நாங்கள் அரசியல்வாதிகள் எங்கள் மத்தியிலிருப்பது கட்சிகளிற்கான தலைவர்களே ஒழிய மக்களுக்கான தலைவர்கள் அல்லர்.

ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தலைவர் இருப்பர் அவ்வளவுதான். தமிழ்தரப்பிற்கு இருக்கின்றதே ஒழிய இவர் சொன்னால் மக்கள் கேட்டு நடப்பார்கள், இவருடைய சொல்லிற்கு கட்டுப்படுவார்கள் எனும் அளவிற்கு தமிழ் இனத்திற்கு தேசியத் தலைமை என்றுயாருமில்லை.

இது எங்களிடமுள்ள மிகப்பெரும் சாபக் கேடாக உள்ளது. இயற்கை ஒருபோதும் வெற்றிடங்களை உருவாக்காது. எங்களிற்கு நிச்சயமாக ஒரு தலைமை கிடைக்க வேண்டும். அதற்கு இறைவனின் வழிகாட்டுதலும் அருளும் கிடைக்குமென நம்புகின்றேன். எமது அரசியல் சூழ்நிலையை பொறுத்த வரையில் நல்ல முதல்வர் ஒருவர் கிடைத்துள்ளார்.

வட மாகாணத்திற்கு மட்டும் முதல்வராக இல்லாமல் ஒட்டுமொத்த தமிழினத்தையும் வழிகாட்டும் தலைமையாகவே முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை நம்பிக் கொண்டுள்ளார்கள். யாருக்கும் அடி பணியாத தன்மை, எவருக்கும் விலை போகாத தன்மை, உண்மையான இதய சத்தியுடன் எங்கள் இனத்திற்கு ஏதாவது செய்ய வேண்டுமென்ற அவாவுடன் இருக்கக்கூடிய தலைமை எமக்கு கிடைத்துள்ளது. அதனால்தான் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை இழக்காமலிருக்கின்றோம் என்றார் அமைச்சர் ஐங்கரநேசன்.