Breaking News

சம்பந்தனுடன் புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது என்கிறார் வடக்கு முதல்வர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் கொழும்பில் நடத்திய பேச்சுக்களின் மூலம், இருவருக்கும் இடையில் நிலவிய முறுகல் நிலை மாறி புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பிபிசி தமிழோசைக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“கொழும்பில் நடைபெற்ற இந்தப் பேச்சுக்களில், முரண் நிலைக்குக் காரணமான பல விடயங்கள் குறித்து, மக்களின் நலன்களை முதன்மைப்படுத்தி விரிவாகவும் சுமுகமாகவும் பேசப்பட்டது.

இந்தப் பேச்சுக்களை அடுத்து எனக்கும் சம்பந்தனுக்கும் இடையில் பல விடயங்களில் நல்ல புரிந்துணர்வு ஏற்பட்டிருக்கிறது. இருவரும் தொடர்பின்றியும் கருத்துக்களைப் பரிமாறாதிருந்தமையுமே தவறான புரிதல்கள் அல்லது முரண்பட்ட நிலைமைக்குக் காரணம் என்பதைத் நாங்கள் இப்போது உணர்ந்துள்ளோம்.

தமிழ் மக்கள் பேரவையானது அரசியல் அமைப்பல்ல. இந்த அமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரானதல்ல என்பதை சம்பந்தனுக்கு நான் எடுத்துக் கூறியதையடுத்து மக்களுக்கு நன்மை செய்யத்தக்க காரியங்கள் பிழையானதல்ல என்பதை அவர் ஏற்றுக்கொண்டார்.” என்றும் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.