Breaking News

இனப்பிரச்சினை தொடர்பில் அரசு இறுதி முடிவை அறிவித்தது

புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சியின் கீழேயே அதிகாரங்களைப் பகிர இலங்கை அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாகவும், இதுகுறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தவுள்ளதாகவும் இலங்கையின் அரச நிறுவன மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள ஐதேக தலைமையகத்தில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், “புதிய அரசியலமைப்பின் மூலம் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். இது குறித்து அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பேச்சுக்களை நடத்தவுள்ளோம்.

இதற்காகவே முழு நாடாளுமன்றத்தையும் நிர்ணய சபை என்ற கோட்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். அதேவேளை நாட்டை பிளவுப்படுத்தும் கொள்கையில் இருந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தற்போது விலகியுள்ளது.

ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரத்தை பரவலாக்கம் செய்யவே அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேசவுள்ளோம் .புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.