Breaking News

கருணா குழுவுடனான தொடர்பினாலேயே ரவிராஜ் கொலை - அரசதரப்புச் சாட்சியம்

கருணா குழுவினருடன் தொடர்புகளை வைத்திருந்ததாலேயே, நாடாளுமன்ற உறுப்பினர் ந.ரவிராஜ் கொலை தொடர்பான தகவல்களை மறைத்ததாக, அரசதரப்புச் சாட்சியான  காவல்துறையில், ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிய பிரீத்தி விராஜ் தெரிவித்துள்ளார்.

நேற்று ரவிராஜ் கொலை வழக்கு விசாரணைகள், கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார். ரவிராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரான மன்னம்பேரி பிரீத்தி விராஜ் அரசதரப்பு சாட்சியாளராக மாறியுள்ளார்.

அவர், இந்தக் கொலைக்கு கங்காராம வீதியில் உள்ள லோன்றிவத்த கடற்படைப் புலனாய்வு முகாமில் தான் திட்டமிடப்பட்டதாக சாட்சியம் அளித்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று நடந்த விசாரணையில், அரசதரப்பு சாட்சியின் நம்பகத்தன்மை குறித்து எதிர்தரப்பு சட்டவாளர் கேள்வி எழுப்பியதுடன், அவரை குறுக்கு விசாரணை செய்தார்.

இதன் போது எதிர்தரப்பு சட்டவாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பிரீத்தி விராஜ், அந்த காலகட்டத்தில் கருணா குழுவினருடன் தொடர்புகள் வைத்திருந்ததால் ரவிராஜ் கொலை தொடர்பான தகவல்களை மறைத்ததாக குறிப்பிட்டார்.