புதிய அரசியலமைப்பிற்கு மஹிந்த ஆதரவு
புதிய அரசியலமைப்பிற்கு தமது பூரண ஆதரவை வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றிற்கு நேற்று (புதன்கிழமை) நோயாளி ஒருவரை பார்வையிட சென்றபோது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தொடர்ந்து கருத்துக் கூறுகையில்-
‘நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதற்காகவே அறுபத்து இரண்டு இலட்சம் மக்கள் தமது வாக்குகளை வழங்கினர். இதனால், இந்த அரசியலமைப்பில் மாற்றத்தை கொண்டுவருவதற்கு எமது பூரண ஆதரவை வழங்க நாம் தயாராகவுள்ளோம்.
ஆளும் கட்சி அல்லது எதிர்கட்சி யாராக இருந்தாலும், இந்த தீர்மானத்தை முன்வைப்பார்களாயின் அவர்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். இந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஜே.ஆர்.ஜயவர்தனவே ஆரம்பித்து வைத்தார். தற்போது அவரது உறவினர் ஒருவரே இதனை மாற்றுவதற்கு முன்வந்துள்ளார். இது ஒரு சிறந்த யோசனையென நான் நினைக்கின்றேன். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவது தொடர்பில் எதிர்ப்பு காணப்படுவதாக எனக்கு தெரியவில்லை.
ஜே.ஆர்.ஜயவர்தன தமது அரசியல் நடவடிக்கைகளை அரசியலமைப்பின் ஊடாகவே முன்னெடுத்தார். அதேபோன்று ஆளும் கட்சியும் தமது நடவடிக்கைகளை புதிய அரசியலமைப்பின் ஊடாகவே முன்னெடுக்க வேண்டும். அதனை விடுத்து குறுக்கு வழிகளில் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பது தவறு’ என்றார்.