நல்லெண்ண செயற்பாடு
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒரு வருடமாகின்ற நிலையில் வடபகுதி மீது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகுந்த அக்கறை கொண்டிருக்கின்ற ஒரு போக்கு உதயமாகியிருக்கின்றது.
நத்தார் தினத்தையொட்டி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஒளிவிழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்த விழா நடைபெற்ற ஒரு மாதம் முடிவடைவதற்கிடையில் யாழ்ப்பாணத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள தேசிய பொங்கல் விழாவில் மீண்டும் ஜனாதிபதி கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. அது மட்டுமல்ல. அவருடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இந்த பொங்கல் விழாவில் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
நத்தார் ஒளிவிழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதியினுடைய யாழ்ப்பாண வருகையின்போது, மேலும் ஒரு தொகுதி காணிகள் வலிகாமம் வடக்கில் பொதுமக்களிடம் கையளிக்கப்படும் என்றும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் தகவல்கள் கசிந்திருந்தன. அதற்கேற்ற வகையில் வலிகாமம் வடக்கில் 700 ஏக்கர் காணிகள் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டன. இந்தக் காணிகள் ஜனாதிபதியினால் தேசிய பொங்கல் விழாவின்போது உரிமையாளர்களிடம் கையளிக்கப்படும் என்ற அறிவித்தலும் வெளியாகியிருக்கின்றது.
தமிழ் அரசியல் கைதிகள் தங்களுடைய விடுதலைக்காக உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தபோது, நவம்பர் மாதம் 7 ஆம் திகதிக்கிடையில் அவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்திருந்தார். அந்த உத்தரவாதத்தை ஏற்று, தமிழ் அரசியல் கைதிகள் தமது போராட்டத்தைக் கைவிட்டிருந்தார்கள்.
ஆனாலும், ஜனாதிபதி தனது உறுதிமொழியை குறிப்பிட்ட கால எல்லைக்குள் நிறைவேற்றத் தவறியிருந்தார். அதனால், கைதிகளின் விடுதலை இழுபறி நிலைமைக்கு ஆளாகியிருந்தது. இருப்பினும் குறிப்பிட்ட ஒரு தொகையினரே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். எஞ்சியவர்களை விடுதலை செய்வதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகத் தெரிவித்திருந்ததுடன், அந்தப் பொறுப்பை சத்தமின்றி ஜனாதிபதியும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சட்டமா அதிபரிடம் ஒப்படைத்திருந்தனர்.
சட்டமா அதிபர் அவர்களை விடுதலை செய்யவில்லை. பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டவர்கள் தவிர்ந்த ஏனைய 200க்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படமாட்டார்கள். அவர்களுக்கு விடுதலை கிடையாது என்ற தகவல் அரச மட்டங்களில் வெளியாகியிருந்தது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசியல் கைதிகள் என எவரும் சிறைச்சாலைகளில் கிடையாது என்று முகத்தில் அறைந்தாற்போல தெரிவித்திருந்தார். அது மட்டுமல்லாமல், சிறைச்சாலைகளில் உள்ள 215 வரையிலான தமிழ்க் கைதிகள் பயங்கரவாதிகள் என்றும், அவர்கள் விடுதலை செய்யப்படமாட்டார்கள் என்றும் அவர் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.
நாட்டில் ஓர் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதில் அக்கறை கொண்டிருந்த தமிழ், முஸ்லிம் மக்கள், 2015 ஜனவரி மாத ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவைத் தோற்கடித்து புதிய வரவாக மைத்திரிபால சிறிசேனவை தெரிவு செய்திருந்தார்கள். புதிய ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற மைத்திரிபால சிறிசேனவுக்கு, தாங்கள் அளித்த அரசியல் ஆதரவைக் கவனத்திற் கொண்டு தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பார்.
கடும்போக்கு அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டிருந்த மஹிந்த ராஜபக் ஷவைப் போலல்லாமல், மென்போக்குடையவராகவும், தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டவராகவும் அவர் செயற்படுவார் என்று நம்பியிருந்தார்கள். இத்தகைய நம்பிக்கையின் அடிப்படையிலேயே தமிழ் அரசியல் கைதிகள் தமக்கு புதிய ஜனாதிபதி பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்வார் என்று மிகுந்த எதிர்பார்ப்பைக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அரசியல் கைதிகள் என்று எவரும் கிடையாது என்றும், 200க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளே சிறைச்சாலைகளில் இருப்பதாகவும், அவர்கள் விடுதலை செய்யப்படமாட்டார்கள் என்றும் பகிரங்கமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தமை தமிழ் அரசியல் கைதிகளின் மனங்களை நோகடித்துள்ளது என்றே கூற வேண்டும்.
இன்னா செய்தாரை ஒறுத்தாரா......?
இந்த நிலையில்தான் தனது ஜனாதிபதி பதவியின் ஒருவருட நிறைவு விழாவில் தமிழ் அரசியல் கைதியாகிய சிவராஜா ஜெனிபன் என்பவரை பொது மேடையில் பகிரங்கமாகக் கைகொடுத்து, அவருடைய முதுகில் தட்டிக்கொடுத்து, பொதுமன்னிப்பளித்து தண்டனையில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுதலை வழங்கியிருந்தார்.
சிவராஜா ஜெனிபனின் சொந்த இடம் அச்சுவேலி. விடுதலைப்புலிகள் அமைப்பில் உறுப்பினராக அவர் செயற்பட்டிருந்தார். கடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்றில் மட்டக்களப்பில் இருந்து வவுனியா நோக்கி பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த அவரை சிவிலுடையில் வந்தவர்கள் திடீரென கைது செய்தார்கள். இந்தச் சம்பவம் மின்னேரியா பகுதியில் நடைபெற்றதாக ஜெனிபனுக்கு நினைவு.
'பேருந்தில் வந்து கொண்டிருந்தபோதே என்னைக் கைது செய்தார்கள். ஊடகங்களில் வெளிவந்திருந்ததைப் போன்று என்னிடம் கிளேமோர் கண்ணிவெடியும் இல்லை. ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.' என தன்னைக் கைது செய்த சம்பவம் குறித்து ஜெனிபன் பொதுமன்னிப்பு பெற்று வீடு திரும்பிய பின்னர் தெரிவித்தார்.
என்னைக் கைது செய்து, விசாரணை என்ற போர்வையில் சிறைச்சாலைகளில் தடுத்து வைத்தார்கள். இப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னைய அரசாங்கத்தில் விவசாய அமைச்சராக இருந்தபோது, அவரைக் கண்ணிவெடி தாக்குதலின் மூலம் படுகொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியிருந்ததாகத் தனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக அவர் விபரம் தெரிவித்தார்.
'பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகளும், யாழ். மேல் நீதிமன்றத்தில் ஒரு வழக்குமாக எனக்கெதிராக மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. ஆனால் நான் இப்போது உள்ள நிலையில் எனக்கு எதிரதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் பற்றிய விபரங்களை நான் வெளியிடவோ அல்லது அவை பற்றி கருத்துக்களை வெளியிடவோ விரும்பவில்லை' எனவும் அவர் கூறினார்.
'ஓடுகின்ற பேருந்தில் வைத்தே என்னைக் கைது செய்தார்கள். பத்து வருடங்களாக மோசமான சிறை வாழ்க்கை வாழ்ந்ததன் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நல்லெண்ணச் செயற்பாட்டில் பொதுமன்னிப்பு பெற்று நான் விடுதலையாகியிருக்கின்றேன். என்னுடைய வழக்குகள் தொடர்பான விபரங்களை நான் தெரிவித்தால், அவைகள் திரிவுபடுத்தப்படக் கூடும். ஏனெனில் பேருந்தில் பயணம் செய்தபோது கைது செய்யப்பட்ட என்னை, கிளேமோர் குண்டுடனேயே கைது செய்ததாக ஊடகங்கள் அப்போது செய்தி வெளியிட்டிருந்தன. எனவே, நான் கூறுகின்ற தகவல்களும் திரிவுபடுத்தப்படக் கூடும்' என்று தனது அச்சத்தை வெளியிட்டார்.
தன்னுடைய அச்சத்திற்கான காரணத்தையும் அவர் விபரித்தார்.
'நான் வெளியிடுகின்ற தகவல்கள் திரிவுபடுத்தப்பட்டால், அது, பெருந்தன்மையுடன் எனக்கு பொது மன்னிப்பளித்த ஜனாதிபதியின் நல்லெண்ணத்திற்கும், நல்லிணக்கத்திற்கான அவருடைய பெருந்தன்மை வெளிப்பாட்டிற்கும் ஊறு விளைவிக்கக் கூடும். எனக்கு இவ்வாறு ஒரு விடுதலை கிடைக்கும் என்று நான் கனவிலும் எண்ணியிருக்கவில்லை. எதிர்பார்த்திருக்கவுமில்லை. என்னை விடுதலை செய்ததற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நானும் எனது குடும்பத்தினரும் எமது மனமார்ந்த நன்றிகளை எமது சிரந்தாழ்த்தி தெரிவித்துக் கொள்கிறோம். எனக்கு மன்னிப்பளித்து விடுதலை செய்த ஜனாதிபதியினுடைய பெருந்தன்மையும் அவருடைய நல்லிணக்கத்திற்கான செயற்பாடும் தொடர வேண்டும்.
இன்னும் சிறைச்சாலைகளில் வாடிக்கொண்டிருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு அவருடைய பெருந்தன்மையுடைய செயற்பாடுகள் அவசியமாகின்றன. எனவே, அந்த பெருந்தன்மைக்குப் பாதிப்பு ஏற்படுவதை நான் விரும்பவில்லை. அதன் காரணமாகவே எனக்கு என்ன நடந்தது என்பது பற்றிய வழக்கு விபரங்களை நான் வெளியிட விரும்பவில்லை' என்றதொரு நீண்ட விளக்கத்தை ஜெனிபன் அளித்தார்.
ஜனாதிபதியின் பெருந்தன்மை மீதமுள்ள அரசியல் கைதிகளை இரட்சிக்குமா?
பத்து வருட சிறைவாழ்க்கை என்பது கொடுமை மிகுந்தது என்று ஜெனிபன் வர்ணித்தார். என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும், எப்போது செய்ய வேண்டும் என்பதை மற்றவர்கள் தீர்மானிப்பதென்பது கொடுமையிலும் கொடுமை. பத்து வருடங்களாக ஒவ்வொரு நிமிடமும் நாங்கள் வாழ்ந்த வாழ்க்கையின் வேதனையை சொற்களில் விபரிக்க முடியாது. அந்த நிலைமைக்கு ஆளாகியிருப்பவர்கள் என்ன செய்தார்கள் என்ன குற்றம் புரிந்தார்கள் என்பதை, அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கான சந்தர்ப்பங்களில், அவர்களின் வகிபாகம் என்ன என்பதை ஆழ்ந்து நோக்க வேண்டியது அவசியம்.
அவ்வாறு ஆழ்ந்து நோக்காமல் வெறுமனே தமிழ் அரசியல் கைதிகளை எழுந்த மானமாகக் குற்றம் சுமத்திக் கதைப்பது சரியல்ல' என்று சுட்டிக்காட்டிய ஜெனிபன், சிறைச்சாலைகளில் உள்ளவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் கைதிகளாகியிருக்கின்றார்கள் என்றும், அவர்களை ஜனாதிபதியும் இந்த அரசாங்கமும் விடுதலை செய்வதற்குரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகள் பொது மன்னிப்பளித்து விடுதலை செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே முன்வைக்கப்பட்டு வந்துள்ளது, இதற்காக பல போராட்டங்கள் சிறைச்சாலைகளுக்குள்ளேயும், சிறைச்சாலைகளுக்கு வெளியில் பரவலாகவும் நடத்தப்பட்டிருக்கின்றன. இந்தக் கோரிக்கையிலும், போராட்டங்களிலும் நியாயம் இல்லாமல் இல்லை.
யுத்தம் முடிவுக்கு வந்து ஏழு வருடங்களாகின்றன. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக முன்னைய அரசாங்கம் அறிவித்திருந்தது. ஆனால் அந்த அறிவிப்பு வெறும் வாய்ப்பந்தலாகவே இருந்தது. யுத்தத்தை முன்னெடுத்த தலைவர்கள் அழிக்கப்பட்டும், சில தலைவர்களை முன்னைய அரசாங்கம் தனக்கு ஆதரவானவர்களாக வைத்து சுகபோகங்களையும் வசதிகளையும் அளித்துள்ள நிலையில், உண்மையாகவே, நல்லிணக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால், தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும். அதுவே யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தவர்களின் பெருந்தன்மையாகவும் நல்லெண்ணத்தின் சிறப்பான வெளிப்பாடாகவும் அமைந்திருக்கும்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களும் இந்த மனிதாபிமான வெளிப்பாட்டைக் கவனத்திற்கொண்டு, தமக்கு ஏற்பட்ட பாதிப்புக்களுக்குக் காரணமானவர்களை மன்னித்து நாட்டில் நம்பிக்கையோடு நல் வாழ்க்கை ஒன்றை ஆரம்பித்திருப்பார்கள். ஆனால் அது முன்னைய அரசாங்கத்தில் நடைபெறவில்லை.
நல்லாட்சியையும் ஜனநாயகத்தையும் நிலைநிறுத்துவதாகக் கூறி, ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள புதிய அரசாங்கம், முன்னைய அரசாங்கத்தின் வழிமுறைகளில் இருந்து விலகி, புதிய பாதையில் பயணிக்க வேண்டும் என்றே பாதிக்கப்பட்ட மக்கள் விருப்பம் கொண்டுள்ளார்கள். அத்தகைய புதிய அரசியல் பாதையில் அரசாங்கத்துடன் முழு நம்பிக்கை வைத்து பயணம் மேற்கொள்வதற்கும் அவர்கள் தயாராக இருக்கின்றார்கள்.
இந்த நிலையில் தன்னைக்கொலை செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தார் என்று குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை, இன்னா செய்தாரை ஒறுத்தல் என்ற தமிழ்ப் பண்பாட்டிற்கமைவாக பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்துள்ள ஜனாதிபதி தனது நல்லெண்ணத்தை ஏனைய கைதிகளின் விடயத்திலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மறுவாழ்க்கை விடயத்திலும் வெளிப்படுத்தும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.
புதிய அரசியல் பயணம் தேவை
ஜெனிபன் என்ற தமிழ் அரசியல் கைதியை விடுதலை செய்துள்ள ஜனாதிபதியின் செயற்பாடு, அவருடைய ஒரு வருட ஆட்சிக்கால நிறைவு விழாவின் ஓர் அரசியல் நோக்கம் கொண்ட செயற்பாடு என்ற மிகவும் குறுகிய வட்டத்திற்குள் அடங்கிவிடக் கூடாது.
தனது ஒரு வருட ஆட்சி நிறைவின்போது வடபகுதிக்கு – யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசத்திற்கு பண்டிகைகளைக் கொண்டாடுவதற்காக, அதன் ஊடாக நல்லெண்ணத்தை வெளிப்படுத்துவதற்காக விஜயங்களை மேற்கொள்வதென்பது, வெறும் அரசியல் செயற்பாடாகக் கருதப்படுவதற்கு இடமளித்துவிடக் கூடாது.
ஜனாதிபதியின் மீது நம்பிக்கை வைத்திருந்த தமிழ் அரசியல் கைதிகள் ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள். அத்தகைய ஏமாற்றச் சூழலில் தனியாளாகிய ஜெனிபன் என்ற அரசியல் கைதி விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார். இவ்வாறான நிலையில் ஜனாதிபதி தனது நல்லெண்ணத்தையும் பெருந்தன்மையையும் மேலும் விரிவுபடுத்த வேண்டும். வெறுமனே விழாக்களில் பங்கெடுத்துக் கொள்வதென்பது அரசியல் இலாபத்தை இலக்காகக் கொண்ட செயற்பாடாகவே நோக்கப்படும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றச் சூழலானது நன்மையான காரியங்களுக்கு வழி வகுப்பதாக அமைய வேண்டும். அதனையே மக்களும் விரும்புகின்றார்கள். எல்லாவற்றிலும் அரசியலைப் புகுத்தி மக்களை ஏமாற்றிய அரசியல் போக்கிற்கு ஒரு முற்றுப்புள்ளி இடப்பட வேண்டும். அதுவே நல்லாட்சியின் நம்பிக்கைக்குரிய அரசியல் அடையாளமாகும்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வது மட்டுமல்லாமல், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு காணப்பட வேண்டும். புதிய ஆட்சியில் மிகவும் பெரிய அளவில் பேசுபொருளாகியுள்ள அரசியலமைப்பு மாற்றம் என்பது ஆட்சியாளர்கள் விரும்புகின்ற மாற்றங்களை மட்டும் கொண்டிராமல், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு விடிவைக் கொடுக்கின்ற சரியான மாற்றங்களையும் உள்ளடக்கியதாகவும் அமைய வேண்டும்.
அரசியலமைப்பில் மாற்றம் செய்வதென்பது ஆட்சியாளர்களின் அரசியல் நோக்கத்தை மட்டும் கொண்டதாக அல்லாமல், அறுபது வருடங்களாகப் புரையோடியுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான ஓர் அரசியல் தீர்வைக் காண்பதாகவும், யுத்தம் காரணமாகவும் தப்பான கருத்துணர்வுகளின் மூலம் பிளவுண்டு கிடக்கும் சமூகங்கள் ஒரே நாட்டு மக்கள் என்ற பரந்த எண்ணத்தின் அடிப்படையில் மனதால் இணைந்து வாழத்தக்க வகையிலான புதிய பாதையில் பயணிப்பதற்கு வழி வகை செய்ய வேண்டும்.
அதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் வடபகுதிக்கான பொங்கல் விஜயம் வழி வகுக்க வேண்டும்.
- செல்வரட்ணம் சிறிதரன்








