Breaking News

அரசியல் கைதிகளுக்கு விடுதலை இல்லை!

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு மாற்றான புதிய சட்டம் கொண்டு வரப்படும் போது, சிறைகளில் உள்ள பல தமிழ் கைதிகளை விடுவிக்க முடியும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

புதுக்குடியிருப்பில் நேற்று ஆடைத்தொழிற்சாலையைத் திறந்து வைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது, அண்மையில் பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்கப்பட்ட சிவராசா ஜெனீவன் மற்றும் அவரது பெற்றோரும் ஜனாதிபதியைச் சந்தித்து தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.அப்போது, சிறைச்சாலைகளில் எஞ்சியுள்ள அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஜனாதிபதியிடம் ஜெனீவன் வேண்டுகோள் விடுத்தார்.

இதனைத் தாம் கவனத்தில் கொள்வதாக உறுதியளித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி விட்டு, கூடுதலான மனிதாபிமான நோக்கம் கொண்ட சட்டம் ஒன்றை வரையும் பணிகள் நடந்து வருவதாகவும், இந்த மாற்றம் இடம்பெறும் போது, சிறைகளில் உள்ள பலரையும் விடுவிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.