Breaking News

‘இலங்கை உச்சநீதிமன்றம் மனித உரிமைகளை காக்க தவறிவிட்டது’

இலங்கை உச்சநீதிமன்றம் மனித உரிமைகளை காப்பதற்கு தவறியுள்ளதாக இலங்கையைச் சேர்ந்த சிவில் அமைப்பொன்று காமன்வெல்த் அமைப்பிடம் முறைப்பாடு செய்துள்ளது.சட்டம் மற்றும் நியாயத்தை காக்கும் அமைப்பு என்ற அமைப்பின் தலைவரான சட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்கு என்பவரே இந்த முறைப்பாட்டை செய்துள்ளதாக கூறியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம்கூட ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாக நீதிமன்ற சுதந்திரத்தை காப்பதாக வாக்குறுதிகளை வழங்கியதாக கூறிய கொடித்துவத்து, இன்று அந்த வாக்குறுதி மீறப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்து முறைப்பாடு செய்யப்பட்டபோது கூட இலங்கை உச்சநீதிமன்றம் அவற்றை விரிவாக விசாரிக்க தவறியதாகவும் அவர் குறை கூறியுள்ளார்.

இதன் காரணமாகவே இலங்கையில் சர்வதேச நீதிபதிகளை கொண்ட விசாரணைக்கு கேட்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், ஆனால், இலங்கை விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளை அனுமதிப்பதை தான் எதிர்ப்பதாக கூறியுள்ளார்.

ஆனால், உச்சநீதிமன்றம் உட்பட நீதித்துறை கட்டமைப்பின் சுதந்திரத்தை காக்குமாறு சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரித்த இலங்கை சட்டத்தரணிகள் சங்க உப தலைவரான சாலிய பீரிஸ், கடந்த காலங்களில் இலங்கை நீதிமன்றங்கள் முக்கியமான பல தீர்ப்புக்களை வழங்கியுள்ளதாக கூறுகின்றார்.

சர்வதேச நீதிபதிகள் திட்டத்தை நிராகரித்த அவர், ஆனால், நீதிமன்ற சுதந்திரம் மேலும் பலப்படுத்தப்பட வேண்டும் என்று கூறுகின்றார்.