Breaking News

அரசியல் கைதிகள் இல்லை என்று வெட்கமின்றி கூறுகின்றார் ரணில்! விக்கிரமபாகு சாடல்

இலங்கையில் அரசியல் கைதிகள் எவரும் இல்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுவிட்சர்லாந்தில் வைத்து தெரிவித்த கருத்துக்கு நவசமசமாஜக் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய நவசமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன இவ்வாறு கண்டனத்தை வெளியிட்டார்.

உள்நாட்டில் தமிழ் அரசியல் கைதிகள் ஏராளமானோர் சிறையில் அடைத்துவைக்கப்பட்டிருக்கையில் வெளிநாட்டுக்குச் சென்று இலங்கையில் அரசியல் கைதிகளே இல்லை என்று தெரிவிப்பதன் மூலம் அரசுக்கே அவப்பெயர் ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பிரதமரின் கருத்து ஜீரணிக்க முடியாத பொய்க்கதை. இலங்கையின் சிறைச்சாலைகளில் தமிழ், சிங்கள அரசியல் கைதிகள் இருக்கின்றார்கள். சிறைகளில் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தங்களது சொந்தத் தேவைகளுக்காக குற்றங்களை இழைத்தவர்கள் அல்லர். அரசியல் ரீதியாக செயற்பட்டு இது குற்றமென கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னர் கைதுசெய்யப்பட்டு பின் வாக்குமூலம் அளித்ததன் பின்னர் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அரசியல் கைதிகளே.

இந்த நிலையில் வெட்கம் இன்றி பிரதமர் ரணில் வெளிநாடுகளில் இவ்வாறு தெரிவித்து வருவதன் மூலம் விவரம் அறிந்தவர்கள் வாய்விட்டுச் சிரிப்பார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.