Breaking News

ஐ.நா. தீர்மானம் குறித்து மைத்திரி, ரணில், மங்கள பேச்சு முடிவுக்கு வருமா?

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை அமுல்படுத்துவது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் நேற்றுமுன்தினம் முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்க சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்தை நிறுவுதல், சர்வதேச பிரதிநிதிகளின் ஒத்துழைப்பைப் பெறுதல் முதலான விடயங்கள் தொடர்பாக நாட்டில் தற்போது சர்ச்சைக்குரிய நிலைமை தோற்றம் பெற்றுள்ள நிலையிலேயே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றம் இலங்கையில் நிறுவப்படவுள்ளதாகவும் இதனூடாக இராணுவத்தினர் தண்டிக்கப்படவுள்ளதாகவும் மஹிந்த ஆதரவு தரப்பினர் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.

இந்நிலையில், ஜெனிவா தீர்மானத்திற்கமைய பொதுநலவாய மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் விசாரணையாளர்கள், சட்டத்தரணிகளின் ஒத்துழைப்பைப் பெறவே இந்தத் தீர்மானத்தின் மூலம் உடன்பட்டுளோம். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேச நீதிமன்றமொன்றுக்கு நாம் உடன்படவில்லை என்று ஜனாதிபதியும், பிரதமரும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இருபபினும், இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் சர்ச்சைக்குரிய கருத்துகள் வெளியிடப்பட்டு வருகின்றமையால் இதை முடிவுக்குக் கொண்டுவர இது குறித்த அடுத்த நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் கலந்துரையாடியுள்ளனர்.

இந்த விடயம் (ஐ.நா. தீர்மானம்) குறித்து ஜனாதிபதியும், தாமும் வெளிவிவகார அமைச்சரும் (நேற்று முன்தினம்) கலந்துரையாடியதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சபையில் தெரிவித்தார்.