Breaking News

வடக்கு கிழக்கு இணைப்பு: வாக்கெடுப்பு தேவையில்லை! என்கிறது பேரவை

வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பது தொடர்பாக கிழக்கு மாகாணத்தில் மாத்திரமே வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என தமிழ் மக்கள் பேரவை யோசனை ஒன்றை முன்வைத்துள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு மாகாணத்தை இணைப்பது தொடர்பாக வட மாகாண மக்கள் முழுமையாக விருப்பம் தெரிவித்துள்ளார்கள். ஆனாலும் வட மாகாண மக்களும் வாக்களிப்பதன் மூலமே கிழக்கு மாகாணத்தை இலகுவாக இணைக்க முடியும் என்று பேரவையின் சில உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

வாக்கெடுப்பு நடத்தப்படாமல் இரண்டு மாகாணங்களையும் இணைக்க வேண்டும் என்றும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் தென் பகுதியில் உள்ள சிங்கள இனவாத கட்சிகள் அதனை குழப்புவார்கள் என்றும் பேரவையின் வேறு சில உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சியுடன் கூடிய ழுமுமையான சமஸ்டி முறைதான் இனப்பிரச்சினைக்கு உரிய அரசியல் தீர்வு என்றும் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தயாகம் எனவும் பேரவையின் உப குழு தயாரித்த புதிய யாப்புக்கான நகல் யோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று 30 ஆம் திகதி சனிக்கிழமை நகல் யோசனைகள் தொடர்பாக பேரவையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் விளக்கமளிக்கப்பட்டு அவர்களின் கருத்துக்களும் பெறப்படவுள்ளன.

நாளை 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் பொது மக்கள் முன்னிலையில் நகல் யோசனையின் முழு பிரதிகளையும் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான விக்னேஸ்வரன் வெளியிடவுள்ளார். 

பின்னர் பொது மக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டு அவர்களிடம் இருந்தும் கருத்துக்களை பெற்று நகல் யோசனையில் சேர்க்கவுள்ளதாக பேரவை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.