Breaking News

மீண்டும் போராட்டத்தில் குதிக்கின்றனர் அரசியல் கைதிகள்

இலங்கையின் சுதந்திர தினத்திற்குள் தம்மை விடுதலை செய்யாவிட்டால் மீண்டும் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர். 

தமிழ் அரசியல் கைதிகள் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அண்மையில் சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்ற வர்த்தக மாநாட்டில், தமிழ் அரசியல் கைதிகள் எவரும் சிறையில் இல்லை என்ற அபாண்டமான பொய்யைக் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளதாகவும் அவர்கள் சாடியுள்ளனர். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு பயணிக்கவுள்ள நிலையி், அவர் தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோரை சந்திப்பதற்கு வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோர் ஏற்பாடு செய்து தரவேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 நேற்று தமிழ் அரசியல் கைதிகள் 13 பேர் நீதி மன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதிலும், தமிழர் என்ற ஒரே காரணத்தால் இவர்களுக்கான நீதி தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். 

இந்த நிலையில் மீண்டும் ஒரு உணவு தவிர்ப்புப் போராட்டத்தை 14 சிறைகளிலுமுள்ள தமிழ் அரசியல் கைதிகளாகிய தாம் முன்னெடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார். தமது இந்த போராட்டத்தின் போது மக்கள் ஆதரவு தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், இதன்மூலம் தமிழ் அரசியல் கைதிகளின் பலமும் பல வீனமும் நல்லாட்சி அரசாங்கத்துக்கு ஒரு எச்சரிக்கையாக அமையும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.