Breaking News

அரசாங்கத்தை கண்டித்து 23 பொது அமைப்புக்கள் அறிக்கை!

பொறுப்புக் கூறல் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்த கருத்துக்களைக் கண்டித்து வடக்கு,

கிழக்கு மற்றும் தெற்கைச் சேர்ந்த 23 பொது அமைப்புக்கள் மற்றும் 121 சிங்கள, தமிழ், முஸ்லிம் செயற்பாட்டாளர்களால் நேற்று முன்தினம் வியாழக்கிழமை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன.

அறிக்கையின் முழு வடிவம்:

2015ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது அமர்வில் இலங்கை உட்பட ஏனைய நாடுகளின் ஏகோபித்த சம்மதத்துடன் நிறைவேற்றப்பட்ட ஜெனீவாப் பிரேரணையை அமுல்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கமானது அன்று வழங்கிய வாக்குறுதிகளிலிருந்து பின்வாங்கும் விதத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் (BBC சிங்கள சேவை, 21 Jan. 2016/ Frontline, 14 Jan, 2016) வெளியிட்ட கருத்துக்களை சிவில் சமூக அமைப்புக்களும், செயற்பாட்டாளர்களுமான நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

இப்பிரேரணையின் துணை அனுசரணையாளர் என்ற ரீதியில் இலங்கை அரசாங்கமானது பிரேரணையின் வரையறைகளை மிகவும் துல்லியமாக பேரம் பேசக்கூடிய ஒரு நிலையில் இருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

பிரேரணையின் உள்ளடக்கங்களுக்கான கலந்தாலோசனைகளின்போது இலங்கை அரசாங்கம் எடுத்துக்கொண்ட நிலைப்பாட்டின் காரணமாக பிரேரணை சமரசமான பிரேரணையாக உருவெடுத்தது மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டோருக்கும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

சமரச பிரேரணையை நிறைவேற்றுவதற்காக வழங்கிய வாக்குறுதிகளில் இருந்து கூட தற்பொழுது இலங்கை அரசாங்கம் பின் வாங்குகிறது போலவே தோன்றுகின்றது.

உருவாக்கப்படவிருக்கும் நீதிப்பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளோ, வல்லுனர்களோ பங்குகொள்ள மாட்டனர் என ஜனாதிபதி சிறிசேன மேற்கண்ட செவ்விகளில் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். BBC சிங்கள சேவைக்கு வழங்கிய செவ்வியில் ஜனாதிபதி சிறிசேன இலங்கையின் தற்போதைய நீதித்துறையிலும், விசாரணை கட்டமைப்புக்களிலும் தான் முழு நம்பிக்கை வைத்திருப்பதாக மேலும் குறிப்பிட்டிருந்தார். அந்தச் செவ்வியில் இலங்கைக்கு வெளிநாட்டு ஆதரவு தேவைப்படுமெனின் அவ்வாதரவு பொருளாதார அபிவிருத்திக்காகவே கோரப்படும் என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதியின் செவ்வியைத் தொடர்ந்து ஓரிரு நாட்களிலேயே ஜானதிபதியின் செவ்வியினால் ஏற்பட்ட சேதத்தை தணிக்கும் வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இலங்கை அரசாங்கமானது ஜெனீவாவில் வழங்கிய வாக்குறுதிகளுக்கு கட்டுப்பட்டே செயற்படும் என சனல் 4 பேட்டியொன்றில் தெரிவித்தார்.

ஜெனீவாப் பிரேரணை நிறைவேற்றப்பட்ட தினத்திலிருந்தே ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையே காணப்படும் இந்த முன்னுக்குப் பின் முரண் நிலையானது பொது வெளியில் ஜெனீவாப் பிரேரணை தொடர்பாக அரசாங்கத்தின் கருத்துப்பரிமாற்றத்தின் ஒரு அங்கமாகவே விளங்குகின்றது.

முற்றிலும் உள்ளக நீதிப்பொறிமுறையொன்று நம்பகத்தன்மையற்றது என்பது இலங்கையில் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டோரின் கருத்தாகும். கடந்தகாலங்களில் இழைக்கப்பட்ட குற்றச்செயல்களும், இன்னும் தொடர்ந்து நிகழ்ந்து வரும் குற்றச்செயல்களும் திட்டமிட்ட விதத்திலேயே நடந்தேறி வந்ததுடன் – வருவதுடன், இந்தக் குற்றங்களை இழைத்த – இழைக்கும் பாதுகாப்பு கட்டமைப்புக்களும் கூடவே நீதித்துறையும், சட்டம் சார்ந்த கட்டமைப்புக்களும் தொடர்ந்தும் மாறாமலே காணப்படுகின்றன.

சித்திரவதைகள், எதேச்சையான தடுப்புக்காவல், சட்டவிரோத கைதுகள், பாலியல் வன்முறைகள் ஆகிய மனித உரிமை மீறல்கள் தொடர்ந்தும் இலங்கையில் திட்டமிட்ட வகையில் நிகழ்ந்து வரும் நிலையில் இதன் பின்னணியில் நீதி மற்றும் சட்டத்துறைகளின் மௌனமானது அந்தக் கட்டமைப்புக்கள் மீது எவ்விதத்திலும் நம்பிக்கையூட்டுவதாக அமையவில்லை.

மேலும், இவ்வாறான பல்லாயிரக்கணக்கான வழக்குகள் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் தேங்கி நிற்பதோடு, ஒரு சில வழக்குகளில் மாத்திரமே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டும் தீர்ப்புக்கள் வழங்கப்பட்டும் உள்ளன. ஆகையினாலே, இழைக்கப்பட்ட குற்றங்களுக்காக வழக்குத்தொடரல் முதற்கொண்டு நிலைமாற்று நீதிப் பொறிமுறையில் வெளிநாட்டு வல்லுனர்களின் பங்குபற்றலை உறுதிசெய்தல் இப்பொறிமுறை மீது மனித உரிமை மீறல்களினால் பாதிக்கப்பட்டோரின் நம்பிக்கையை வென்றெடுக்க முக்கிய காரணியாக அமையும்.

மேலும், இந்த நீதிப் பொறிமுறையில் வெளிநாட்டு வல்லுனர்களின் பங்குபற்றலானது திறன், நிபுணத்துவம் சார்ந்தது மட்டுமன்றி அதற்கும் அப்பால் விருப்பு – சம்மதம் தொடர்பானது என்பதனையும் புரிந்து கொள்ளுதல் முக்கியமானது. நீதிப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளையும், சட்ட வல்லுனர்களையும் உள்ளடக்க 2015ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் இலங்கை அரசாங்கம் சம்மதித்தபோது பொறுப்புக்கூறல் தொடர்பாக இவ்வரசாங்கம் தீர்க்கமாக செயற்படும் என்றே எண்ணத் தோன்றியது. அன்று அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளிலிருந்து இன்று பின்வாங்குதல் பொறுப்புக்கூறல் தொடர்பாக செயற்படுவதற்கு இவ்வரசாங்கத்துக்கு இருக்கும் ஆர்வத்தை கேள்விக்குட்படுத்துகின்றது.

இலங்கை அரசாங்கமானது ஜெனீவா பிரேரணைக்கு அமைவாக இலங்கையில் நிலைமாற்று நீதி பொறிமுறையை வடிவமைப்பதற்கு ஆலோசனைகளை ஆரம்பித்திருப்பதாக கூறும் நிலையில், ஜனாதிபதி சிறிசேனவின் இக்கருத்துக்கள் அந்த ஆலோசனை செயல்முறைகளை வெகுவாக பலவீனப்படுத்துவதுடன், அவ்வாலோசனை முயற்சிகளின் பலனை கேள்விக்குறிக்கு உள்ளாக்குகின்றன. மேலும், இந்தப் நீதிப்பொறிமுறைகளை உருவாக்க அரசாங்கம் ஏற்கனவே வரைபு சட்டங்களை உருவாக்கியுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில் அரசாங்கம் மேற்கொண்டு வருவாதாகக் கூறும் ‘ஆலோசனைகள்’ வெறும் கண்துடைப்பு செயற்பாடுகளோ என எமக்கு எண்ணத் தோன்றுகின்றது.

மேலும், மேற்கண்ட அதே BBC செவ்வியில் ஜனாதிபதி சிறிசேன, பதவியேற்ற பின்னும் தொடர்ந்து நிகழ்ந்து வருவதாக ஆவணப்படுத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல்களை நிராகரித்தமையும், அவருக்கு முன்னமைந்த ஜனாதிபதி போன்றே மனித உரிமை மீறல்கள் தொடர்பாக குற்றம் சுமத்துவோர் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு சார்பானவர்கள் என்ற கருத்தை முன்வைத்ததும் மிகவும் வருத்தத்துக்குரியது.

மேலும், யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த “தேசிய பொங்கல் விழா” நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த காலங்களில் காணாமல் ஆக்கப்பட்டோரில் பெரும்பாலானோர் தற்போது இறந்துவிட்டதாக தெரிவித்திருந்தார்.

உணர்ச்சியற்ற இக்கூற்றானது பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வேதனையை பன்மடங்காக்கியிருக்கும். அதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் அரசாங்கத்தின் அசமந்த போக்கை வெளிச்சமிட்டு காட்டுகின்றது. பிரதமர் இதே கருத்தை தொடர்ந்து வந்த தனது சனல் 4 செவ்வியிலும் குறிப்பிட்டிருந்தார். காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பிரதமரிடம் இவ்வாறான தகவல்கள் இருப்பின் அவற்றை அவர் ஏன் உரிய வழிமுறைகளூடாக வெளிப்படுத்தவில்லை என்ற கேள்வி எழுகின்றது. மேலும், குறைபாடுகள் நிறைந்த பரணகம ஆணைக்குழுவை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் கைவிடுமாறு கோரியிருந்தும் அரசாங்கமானது அவ்வாணைக்குழுவை தொடர்ந்தும் நடாத்திச் செல்ல முடிவெடுத்துள்ளமையானது காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் அரசாங்கமானது நேர்மையாக செயற்பட விரும்பவில்லை என்பதற்கு சான்றாகும்

இது போன்றே, அரசாங்கம் அரசியல்கைதிகள் தொடர்பாக தானே வழங்கிய வாக்குறுதிகளையும், காலக்கெடுகளையும் நிறைவேற்றாத நிலையில் உலக பொருளாதார அவை கூட்டத்தொடரில் பங்குபற்றியிருந்த பிரதமர் தமது அரசை பொறுத்தவரை இலங்கையில் அரசியல்கைதிகள் காணப்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

மேற்கூறிய சகலவற்றையும் கருத்தில் கொள்ளும்போது, இலங்கை அரசாங்கம் 2015 ஐப்பசி மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு தான் துணை அனுசரணையாளராக நின்றது சர்வதேசத்தில் தனது நிலையையும் இருப்பையும் தக்கவைக்க மேற்கொண்ட வெறும் வெளிநாட்டு கொள்கை தந்திரமே என அஞ்சுகிறோம். இந்த நிலையில், இலங்கை அரசாங்கமானது 2015 ஐப்பசி நிறைவேற்றப்பட்ட பிரேரணை தொடர்பாகவும், குறிப்பாக கலப்பு நீதிப்பொறிமுறையை நிறுவுதல் தொடர்பாகவும் தனது நிலைப்பாட்டை கொள்கை அறிக்கையாக வெளியிடுமாறு உடனடியாக கேட்டுக் கொள்கின்றோம். இலங்கை அரசாங்கமானது ஜெனீவாவில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற பொறுப்புடையதாக செய்ய வேண்டியது உள்நாட்டு, வெளிநாட்டு பங்குதாரர்களின் கடமை என்பதே எமது எண்ணம்.

அமைப்புகள்:

Centre for Human Rights and Development (CHRD)
Centre for the Promotion and Protection of Human Rights (CPPHR), Trincomalee
Ceylon Tamil Teachers’ Union
Ceylon Teachers Union (CTU)
Dabindu Collective
Documentation Centre for Justice
Families of the Disappeared (FoD)
Jaffna Economists Association
Jaffna University Employees Union
Jaffna University Teachers Association (JUTA)
Mannar Citizens Committee (MCC)
Mannar Women’s Development Federation (MWDF)
Muslim Women’s Development Trust (MWDT)
National Fisheries Solidarity Movement (NAFSO)
National Movement for Release of Political Prisoners
North-East Coordinating Committee on Disappearances
Right to Life (R2L)
Tamil Civil Society Forum (TCSF)
Tamil Lawyers Forum
The Social Architects (TSA)
TheCommission for Justice and Peace of the Catholic Diocese of Jaffna
Uyiroli – Brightness of Life Organisation
Vavuniya Citizens Committee