இலங்கை சிறைகளில் அரசியல் கைதிகள் எவரும் இல்லை! -ஜனாதிபதி
கைதிகளாக பிடிபட்டுள்ள முன்னாள் பயங்கரவாத செயற்பாட்டாளர்கள் 215 பேருக்கு பொது மன்னிப்பு கிடையாது எனவும், இலங்கையில் அரசியல் சிறைக் கைதிகள் என எவரும் இல்லையெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இந்திய பத்திரிகையொன்றுக்கு ஜனாதிபதி கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறும், தமிழ் சிறைக் கைதிகளை விடுதலை செய்யுமாறும் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதம் இன்று மேலைத்தேய நாடுகளுக்கும் பெரும் தலையிடியாக மாறியுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கு முன்னர் அதிலுள்ள விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படல் வேண்டும்.
ஜெனீவா பிரேரணைகளுக்கு ஏற்ப யுத்தக் குற்றச் செயல்கள் முறைப்பாட்டு விசாரணைக்கு விசேட நீதிமன்றமொன்றை ஆரம்பிப்பதற்கு இலங்கைக்கு எந்தவித அவசரமும் இல்லையெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தத்தின்போது என்ன நடைபெற்றது என்பது குறித்து கவனம் செலுத்தப்படும். இதனையடுத்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். ஜெனீவா பிரேரணைகளில் எமக்கு எந்தவித பணிப்புரைகளும் விடுக்கப்படவில்லையெனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.








