கூட்டமைப்பு - முஸ்லிம் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நாட்டுக்கு ஆபத்து - தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு, - ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கிடையேயான பேச்சுவார்த்தைகள் "இலங்கையில் முஸ்லிம் பிரிவினைவாதம்" தலைதூக்க ஏதுவாக அமையும் என எச்சரிக்கை விடுக்கும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதம் இலங்கையில் ஊடுருவும் அபாயம் உள்ளதாகவும் குறிப்பிட்டது.
இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில்,
கூட்டமைப்பு - முஸ்லிம் காங்கிரஸுக்குமிடையேயான பேச்சுவார்த்தைகள் நாட்டுக்கு ஆபத்தாகவே அமையும். கூட்டமைப்பின் வடக்கு - கிழக்கு இணைப்பிற்கு முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதில் கூட்டமைப்பு நாட்டம் காட்டும்.
இவ் விடயத்தில் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் நிர்வாக அலகிற்கு கூட்டமைப்பின் ஆதரவை முஸ்லிம் காங்கிரஸ் கேட்பதோடு, அதற்கு கூட்டமைப்பும் வடக்கு கிழக்கு இணைப்பிற்கு ஆதரவைப் பெற்றுக் கொண்டு முஸ்லிம் காங்கிரஸின் தேவையை நிறைவேற்றும். இதனால் கிழக்கில் முஸ்லிம் பிரிவினைவாதம் தலைதூக்கும்.
ஏற்கனவே கிழக்கில் முஸ்லிம் அமைப்பிற்கு இராணுவப் பயிற்சி வழங்கப்பட்டது எமக்கு நினைவிருக்கின்றது. இந்த நிலையில் முஸ்லிம் நிர்வாக அலகு ஏற்படுத்தப்படுவது முஸ்லிம் பிரிவினைவாதத்திற்கு சாதகமாக அமையும். அதுமட்டுமல்லாது ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் இலங்கைக்குள் ஊடுருவும் ஆபத்தும் இருக்கின்றது என்றார்.