உரிய நேரத்தில் மஹிந்தவை களமிறக்கி ஆட்சியை கைப்பற்றுவோம்!
ஐக்கிய தேசியக் கட்சியை வீழ்த்தும் பலமான அணியாக நாம் இருக்கின்றோம். இப்போதும் எமது அணியே ஐக்கிய தேசியக் கட்சிக்கு சவாலானது. நாம் ஆட்சியை கைப்பற்றினால் எம்முடன் வந்து ஒட்டிக்கொள்ள பலர் மாற்று அணியிலும் உள்ளனர் என பாராளுமன்ற உறுப்பினரும் மஹிந்த ஆதரவு அணியின் தலைவருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
உரிய நேரத்தில் மஹிந்தவை களமிறக்கி ஆட்சியை கைப்பற்றுவோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் தனி அணியினர் களமிறங்க திட்டம் உள்ளதா என ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
நல்லாட்சி என்ற பெயரில் இந்த அரசாங்கம் பயணிக்கும் பாதை மிகவும் மோசமானது. நாட்டு மக்களை ஏமாற்றி நாட்டை பிரிக்கும் முயற்சியையே இந்த அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. எந்த சந்தர்ப்பத்திலும் நாம் ஐக்கிய தேசியக் கட்சியை எதிர்க்கும் கட்சியாகவே செயற்பட்டு வருகின்றோம். இன்றும் எமது அணியினரே பிரதமர் ரணிலை எதிர்க்கும் பலமான கட்சியாக செயற்பட்டு வருகின்றனர். அதேபோல் இந்த அரசாங்கம் எம்மை கண்டு அஞ்சுகின்றது. மஹிந்த ராஜபக் ஷவை கண்டு ஐக்கிய தேசியக் கட்சி அஞ்சுகின்றது.
ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் மஹிந்த அணியை பலப்படுத்தவே விரும்புகின்றார். ஆரம்பத்திலும் மஹிந்த ராஜபக் ஷவை பிரதமர் வேட்பாளராக நியமிக்கவும் ஜனதிபதியே எமக்கு ஆதரவு வழங்கினார். அதற்கமையவே கடந்த பொதுத் தேர்தலில் நாம் அவரை நியமித்தோம். அதேபோல் அந்த தேர்தலில் மக்களின் பூரண ஆதரவும் எமக்கு கிடைத்தது. எனினும் எமது வெற்றியை ஐக்கிய தேசியக் கட்சியினர் பறித்து விட்டனர்.
இப்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் நாற்பதுக்கும் அதிகமான பிரதிநிதிகள் எம்முடன் உள்ளனர். அதேபோல் கடந்த தேர்தலில் நாம் 90க்கும் அதிகமான ஆசனங்களை பெற்றோம். நாம் ஆட்சியை கைப்பற்றினால் எம்முடன் வந்து ஒட்டிக்கொள்ள பலர் மாற்று அணியிலும் உள்ளனர். இப்போதும் நாம் பலமான நிலையில் தான் உள்ளோம். அதேபோல் மாற்று அணியைப் பற்றிய கேள்விக்கு இப்போது பதில் கூறவேண்டிய அவசியம் எமக்கு இல்லை. எனினும் உரிய நேரத்தில் மஹிந்தவை களமிறக்கி ஆட்சியை கைப்பற்றுவோம். மக்களின் ஆதரவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவும் எமக்கு உள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான பலமான அணியினர் நாம் தான். மஹிந்த ராஜபக் ஷவும் இந்த அணியில் தான் உள்ளனர். எனவே யாரும் அவசரப்பட வேண்டாம். அவரை எவ்வாறு பயன்படுத்துவது என்பது எமக்கு தெரியும். அவர் மக்களுடன் மக்களாக வாழ விரும்புகின்றார். ஆனால் விரைவில் தலைமைத்துவத்தை ஏற்பார். ஐக்கிய தேசியக் கட்சிக்கு உள்ள ஒரே சவால் அவர் மட்டுமே. ரணில் விக்கிர்மாசிங்க வேறு எவருக்கும் சவாலான ஒருவர் அல்ல. மஹிந்தாவை மட்டுமே அவர் சவாலாக இன்றும் நினைக்கின்றார். இப்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஐக்கிய தேசியக் கட்சி பிற்போட தீர்மானித்துள்ளது. அவ்வாறு இல்லாது நாளை தேர்தலை நடத்துவதாக அறிவித்தாலும் அப்போதும் எமது தெளிவான பதிலை முன்வைப்போம் என்றார்.