ஐ.நா பிரதிநிதிக்கு அழைப்பு விடுங்கள் - ஜனாதிபதியிடம் உண்மை மற்றும் நீதி அமைப்பு கோரிக்கை
யுத்தத்தின் போது பாலியல் வன்முறைகளை தடுக்கும் பிரகடனத்தில் இலங்கை கையொப்பமிட்டுள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும். ஆனால் யுத்தத்தின் போது பாலியல் வன்கொடுமைகள் துன்புறுத்தல்களை இல்லாதொழிக்க அர்ப்பணிப்புடன் இலங்கை அரசாங்கம் செயற்படவேண்டும் என்று சர்வதேச உண்மை மற்றும் நீதி அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த வி்டயம் குறித்து தனது அர்ப்பணிப்பை வெளிக்காட்ட இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் யுத்தத்தின் போதான பாலியல் வன்முறைகள் குறித்து ஆராயும் விசேட அறிக்கையாளர் சைனாப் பங்குராவை இலங்கைக்கு அழைக்கவேண்டும் என்றும் உண்மை மற்றும் நீதி அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் யுத்தத்தின்போது இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் தொடர்பில் தண்டனை வழங்கப்படாத நிலை காணப்படுகின்றது என்றும் பாதுகாப்பு தரப்பினரின் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் ஒரு வருடத்துக்கு முன்னர் ஐக்கிய நாடுகள் சபை அண்மையில் வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கையை அண்மையில் வெளியிட்டிருந்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அலுவலகம் யுத்த காலத்தில் பாதுகாப்பு தரப்பினரால் முன்னெடுக்கப்பட்ட பாலிய வன்முறைச் சம்பவங்கள் யுத்தக் குற்றச்சாட்டுக்களாகும் என்று தெரிவித்திருந்தது.
கடந்த ஒக்டோபர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கையின் அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் யுத்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்முறைச் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.