வடக்கு அரசியல்வாதிகள் போலி குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனராம்!
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின்போது, இலங்கை மீது போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்துவதற்கு வடக்கின் சில அரசியல்வாதிகள் முயற்சித்து வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறிப்பாக வடக்கில் வதை முகாம்கள் காணப்படுவதாக போலி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, ஐ.நா அதிகாரிகளை நாட்டிற்கு வரவழைத்து இராணுவ முகாம்களை சோதனையிடும் முயற்சியாகவே இது உள்ளதென அச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறான சில அரசியல்வாதிகளே வலிகாமல் வடக்கில் இராணுவ வதை முகாம் காணப்பட்டதாக தெரிவித்ததாகவும் குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட பளை, வீமன்காமம் வடக்கு, வலி வடக்கு ஆகிய பிரதேசங்களில் அமைந்திருந்த இராணுவ முகாம்களுள் வதை கூடங்கள் இருந்தமைக்கான சாட்சியங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை இலங்கை இராணுவம் முற்றாக மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








