Breaking News

சர்வதேச விசாரணையை நிராகரிக்கவில்லை!

இலங்கையின் யுத்த குற்ற விசாரணையில் சர்வதேச நீதவான்கள் உள்ளடக்கப்பட மாட்டார்களென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள நிலையில், சர்வதேச விசாரணையை தாம் நிராகரிக்கவில்லை யென்கிறார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க.

சனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜெனீவா மனித உரிமைகள் ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை செயற்படுத்துவதற்கு நாம் கடமைப்பட்டிருக்கின்றோம் என பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.

காணாமல் போனவர்கள் தொடர்பில் ஆறு வருடங்களாகியும் இன்னும் எவ்வித தகவலும் வெளிவரவில்லையே என இதன்போது ஊடகவியலாளர் கேள்வியெழுப்பினார். அதற்கு, காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகிய செயற்பாடுகளை மே மாதமளவில் செயற்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.

யுத்தத்தின்போது சரணடைந்தவர்களின் நிலை என்னவென ஊடகவியலாளர் கேட்டபோது, அநேகமாக அவர்கள் இறந்திருக்கலாமென்ற பதிலையே பிரதமர் வழங்கியுள்ளார். அவர்கள் எப்படி இறந்தார்களென அறிவதற்காகவே உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு ஆகியன விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பிரதமர் இதன்பேது குறிப்பிட்டார்.

இதன்போது இரகசிய தடுப்பு முகாம்கள் அமைந்துள்ளதாக வெளியான தகவல்கள் பற்றி ஊடகவியலாளர் கேட்டதற்கு, வடக்கிலும் சரி தெற்கிலும் சரி அவ்வாறான தடுப்பு மையங்கள் எதுவும் இல்லையென பிரதமர் குறிப்பிட்டார். மேலும், 292 பேர் மாத்திரமே தடுப்புக் காவலில் இருந்ததாகவும் வேறு எவரும் இல்லையெனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

இதேவேளை இறுதிக்கட்ட யுத்தத்தில் 40 ஆயிரம் பேர் இறந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட விடயம் பற்றி வினவியபோது, இதுபற்றி மேலும் விசாரணை அவசியமென குறிப்பிட்டார். இறுதிக்கட்ட யுத்தத்தில் பலர் இறந்துள்ளபோதும் சரியான எண்ணிக்கையை கண்டறிவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். 40 ஆயிரம் பேர் இறந்துள்ளனரா என்ற கேள்வி எழுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யுத்தக் குற்றம் மற்றும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் மீது அதிக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளமை பற்றி கேட்டபோது, யாராக இருந்தாலும் குற்றம் இழைத்திருந்தால் அவர்களுக்கெதிராக வழக்குத் தொடரப்படுமென பிரதமர் ரணில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.