Breaking News

ராஜபக்ச குடும்பத்தை அதிர்ச்சியில் உறைய வைத்த யோசிதவின் கைது – படங்கள்

நிதி மோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி யோசித ராஜபக்ச நேற்று மாலை கடுவெல நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போது, ராஜபக்ச குடும்பத்தினர் கலக்கத்துடன் ஒன்று குவிந்திருந்தனர்.

யோசித ராஜபக்ச கைது செய்யப்பட்டு கடுவெல நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ளதாக செய்தி அறிந்தவுடன், அவரது தாயார் சிராந்தி ராஜபக்ச, மற்றும் சிறிய தந்தைமாரான பசில் ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச, சகோதரரான நாமல் ராஜபக்ச ஆகியோர் கடுவெல நீதிமன்றத்துக்கு ஓடி வந்தனர்.

மகிந்த ராஜபக்ச வெளியூரில் இருந்ததால், மாலை 6.12 மணியளவில் தான் கடுவெல நீதிமன்றத்துக்கு வந்து சேர்ந்தார்.யோசித ராஜபக்சவை அடுத்த மாதம் 11ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க கடுவெல நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார்.

எனினும், அவரை கைவிலங்கிட்டு சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றி வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு கொண்டு செல்ல காலதாமதமானது. இருள் சூழ்ந்த பின்னரே பலத்த பாதுகாப்புடன் அவர் சிறைச்சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.யோசித ராஜபக்சவின் கைதினால், கடுவெல நீதிமன்றத்தில் ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் அதிர்ச்சியுடன் காணப்பட்டனர்.

தனது மகன் கைவிலங்கிடப்பட்டு கொண்டு செல்லப்பட்டதை பார்த்து மகிந்த ராஜபக்ச கண்கணங்கிப் போயிருந்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,

“எனது மகன் தவறு செய்திருப்பான் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் அவன் அப்பாவி என்று எனக்குத் தெரியும். அவர்கள் என்னைப் பழிவாங்க முயற்சிக்கிறார்கள்.” என்று குறிப்பிட்டார்.