தமிழில் தேசிய கீதம் பாடியதன்மூலம் தமிழீழ கீதம் பாடப்படுவதை நிறுத்தியுள்ளோம்!
தமிழில் தேசிய கீதம் பாடியதன்மூலம் தமிழீழ கீதம் பாடப்படுவதை நிறுத்தியுள்ளோம். இது அரசாங்கத்துக்கு கிடைத்த பெரு வெற்றியாகும் என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமைக் காரியாலயமான சிறிகொத்தாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
நாட்டின் 68ஆவது சுதந்திர தினத்தின் போது தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதுதொடர்பில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இவர்கள் இதன் மூலம் மீண்டும் நாட்டில் இனவாதத்தை பரப்புவதற்கே முயற்சிக்கின்றனர். தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமையானது புதிய விடயமல்ல. 1949ஆம் ஆண்டு டி.எஸ்.சேனாநாயக தலைமையில் அன்று பாடப்பட்டது. அதன் பிறகு 2016ஆம் ஆண்டு பாடப்பட்டுள்ளது. தமிழில் தேசிய கீதம் பாடியதன்மூலம் வடக்கில் தமிழீழ கீதம் பாடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. இது எமக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும்.
அத்துடன் நாட்டில் சிறுபான்மை இனங்கள் மதிக்கப்படுவதில்லையென்ற குற்றச்சாட்டு கடந்த காலங்களில் சர்வதேச நாடுகளில் இருந்து வந்துள்ளது. தற்போது அந்த குற்றச்சாட்டுக்களும் இல்லாமல் செய்யப்பட்டு வருகின்றன. சர்வதேசமும் எம்மீது நம்பிக்கைவைத்து வருகின்றது.
மேலும் தேசிய கீதத்தை தமிழில் பாடியதன் மூலம் எதிர்காலத்தில் அரபு மொழியிலும் பாடக் கேட்பார்கள் என மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்துள்ளார். நாட்டில் 10 வருடங்கள் ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் மற்றும் பாராளுமன்றத்தில் மூத்த அரசியல் வாதியாகவும் இருந்த இவர் பாலர் பாடசாலை மாணவன் போன்று கூறியிருப்பது கவலைக்குரிய விடயமாகும்.
யுத்தம் முடிவடைந்தவுடன் பாராளுமன்றத்தில் உரையாற்றிய மஹிந்த ராஜபக் ஷ, இந்த நாட்டில் சிறுபான்மை இனத்தவர்கள் என்று எவரும் இல்லை. இங்கு எல்லோரும் ஒரே மக்கள் என்று தெரிவித்திருந்தார். இதன்மூலம் சிறுபான்மை மக்களும் தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என நம்பினார்கள்.
ஆனால் சிறுபான்மை மக்களுக்கு அவரால் எதுவுமே செய்ய முடியவில்லை. மாறாக இனங்களுக்கிடையில் பிரச்சினைகளையே ஏற்படுத்தினார். சிறுபான்மை மக்கள் நிம்மதியற்று வாழக்கூடிய நிலைமையே கடந்த ஆட்சியில் இருந்தது. தற்போது ஜனாதிபதியும் பிரதமரும் சிறுபான்மை மக்களை மதித்து அவர்களின் பிரச்சினைகளை தீர்த்துவைக்கும்போது அதனை பொறுத்துக்கொள்ளமுடியாமல் மஹிந்த ராஜபக் ஷ இனவாதத்தை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்து வருகின்றார்.
அத்துடன் இந்தியாவில் கூட ஒரு மொழியில் தான் தேசிய கீதம் பாடப்படுவதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சினர் தெரிவிக்கின்றனர். தேசிய கீதத்துக்கு இந்தியாவை முன்மாதிரியாக எடுக்கும் இவர்கள் அதிகார பரவலாக்கத்துக்கு ஏன் இந்தியாவை முன்மாதிரியாக எடுப்பதை எதிர்க்கின்றனர்? இவர்கள் அனைவரும் தங்களது சுயநலத்துக்காகவே செயற்படுகின்றனர்.
68 வருடங்கள் பின் தள்ளப்பட்டுள்ள எமது நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்கி நல்லாட்சியை ஏற்படுத்தியுள்ளனர். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் பொய்க்குற்றச்சா ட்டுக்களை தெரிவித்து மக்களின் வாழ்க்கையுடனும் பிள்ளைகளின் எதிர்காலத்துடனும் விளையாட வேண்டாம் என்றார்.








