சென்னை ஐ.நா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு
பெப்ரவரி 12ம் திகதி சென்னையில் உள்ள ஐ.நா அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று மே பதினேழு இயக்கம் அறிவித்துள்ளது.
இனப் படுகொலைக்கான சர்வதேச விசாரணையை நடத்த வேண்டும், தமிழீழ விடுதலைக்கான பொது வாக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும், தமிழ் பகுதிகளில் இருந்து சிங்கள இராணுவத்தை வெளியேற்ற வேண்டும், தமிழ் அரசியல் சிறைவாசிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும், தமிழர்களை விசாரிக்க இலங்கை அரசை அனுமதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன்படி, சென்னை, அடையாறு, மத்திய கைலாசம் அருகில் உள்ள ஐ.நா. அலுவலகம், ஈழத் தமிழர்களுக்காக நீதி கேட்டு, ஐ.நா. அலுவலகத்தின் முன்பு தீக்குளித்து உயிர்விட்ட முருகதாசன் நினைவு நாளான பெப்ரவரி 12ம் திகதி முற்றுகையிடப்பட்டு போராட்டம் நடத்தப்படும் என்று மே பதினேழு இயக்கம் அறிவித்துள்ளதாக தமிழக ஊடகமான நக்கீரன் செய்தி வௌியிட்டுள்ளது.








