Breaking News

ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கை பயணம் குறித்து எடுத்துரைப்பார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

ஜெனிவாவில் எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 31 ஆவது கூட்டத்தொடரில், தனது இலங்கை பயணம் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹுசேன் விளக்கமளிக்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

பேரவையின் 31ஆவது கூட்டத் தொடரின் முதல் அமர்வில் நிகழ்த்தவுள்ள நீண்ட உரையில், செய்ட் ராட் அல் ஹுசேன், இலங்கை தொடர்பாக ஒரு பகுதியை ஒதுக்கி உள்ளதாகவும், அதன்போது, இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் குறித்து சுருக்கமான தகவவல்களை வெளியிடுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, மார்ச் 24 ஆம் நாள் வரை நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 31 ஆவது கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பாக விவாதம் நடத்துவதற்கு வேறெந்த நிகழ்ச்சி நிரலும் தயாரிக்கப்படவில்லை.

எனினும், பொது விவாதங்களில், நாடுகளின் பிரதிநிதிகள் உரையாற்றும்போது அவ்வப்போது இலங்கை குறித்து கேள்விகளை எழுப்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேரவையின் இந்தக் கூட்டத்தொடரில், இலங்கையின் சார்பில், ஜெனிவாவில் உள்ள இலங்கையி்ன் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க தலைமையிலான குழுவினர் பங்கேற்கவுள்ளனர்.