காணாமல் போனோரின் உறவினர்கள் இன்னும் அச்சுறுத்தப்படுகின்றனர்!
யுத்தத்தின்போது காணாமல் போனோரின் உறவுகள் இன்னும் அச்சுறுத்தப்படுவதாக, தமக்கு அறியக்கிடைத்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அரசாங்கத்திடமும் மனித உரிமை அமைப்புகளிடமும் பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு செய்துள்ளதாக அமைச்சர் மனோ, சர்வதேச ஊடகமொன்றிடம் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவ புலனாய்வாளர்கள் என்று கூறிக்கொள்வோர் மற்றும் இனந்தெரியாத நபர்களிடமிருந்து தொலைபேசி வழியாக மற்றும் நேரடியாக உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும், பெண் பிள்ளைகளுக்கு இரவு நேரத்தில் பாதுகாப்பு இல்லையென்றும் வடக்கு கிழக்கிலுள்ள பெண்கள் தம்மிடம் முறையிட்டு அழுதுள்ளதாக அமைச்சர் மனோ மேலும் தெரிவித்துள்ளார்.
இப்பிரச்சினை குறித்து வடக்கு, கிழக்கு பிராந்தியங்களுக்கு பொறுப்பான பொலிஸ் உயரதிகாரிகள் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் தொடராமல் இருப்பதற்கு ஆவண செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.








