கொலை செய்யப்பட்ட மாணவிக்கு நீதிகோரி கிளிநொச்சியிலும் ஆர்ப்பாட்டம்
வவுனியாவில் அண்மையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் கொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி சார்பில் நீதிகோரி, கிளிநொச்சியில் மக்கள் பேரணியில் ஈடுபட்டனர்.
இந்த கண்டனப் பேரணி இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் கிளிநொச்சி வர்த்தக சங்கத்தினரின் ஏற்பாட்டில் நகரில் ஆரம்பமாகி மாவட்ட செயலகம் வரை சென்றது.இதன் பின்னர் பேரணி ஏற்பாட்டுக் குழுவினரால் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.
வவுனியா நகரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்விகற்ற 14 வயதுடைய க.ஹரிஸ்ணவி என்ற மாணவி அண்மையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.இவரது மரண பரிசோதனையில் மாணவி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட பின்னரே கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்திருந்தது.
இதேவேளை மாணவி ஹரிஸ்ணவியின் கொலைக்கு எதிராகவும், சம்மந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குமாறு வலியுறுத்தியும் இன்றைய தினம் வவுனியாவிலும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.