Breaking News

தமிழர்களை கொத்தடிமைகளாக்குவதற்கு புதிய அரசியல் அமைப்பு தயாரிக்கப்படுகிறது - வைகோ

ஈழத்தமிழர்களை நிரந்தர கொத்தடி மைகளாக்குவதற்கு புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டு வருவதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில் புதிய அரசியலமைப்பு திட்டத்தில் சமஷ்டி தீர்வுக்கு இடமில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா ஆட்சி காலத்தில் 1948 ஆண்டு சோல்பரி யாப்பு இயற்றப்பட்டபோது, தமிழர்களுடைய வரலாற்று பிண்ணனி இல்லாது சிங்களவர்களுக்கு கட்டற்ற உரிமைகளை அந்த ஆணையம் வழங்கியுள்ளது.

இதேவேளை சோல்பரி பிரவு “சிலோன் ஏ டிவைடெட் நேஷன்“ நூலிற்கு முகவுரை எழுதும்போது தாம் எழுதிய அரசியல் சட்டம்மூலத்தின் மூலம் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக உணர்கிறேன் என அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.

இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை படுகொலை செய்தபோது காங்கிரஸ் கூட்டணியரசு துணைநின்றது போன்று, இன்று தமிழர்களை நிரந்தர கொத்தடிமைகளாக்கும் திட்டத்திற்கு பாரதீய ஜனதா அரசு வெண்சாமரம் வீசுவதாகவும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை இந்தியரசு கொடுத்த துணிச்சல்தான் புதிய அரசியல் யாப்பு திட்டத்தில் சமஷ்டி முறை கிடையாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவிக்க காரணம் எனவும் வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.