Breaking News

ரவிராஜ் கொலைக்கு 5 கோடி வழங்கிய கோத்தா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜை கொலை செய்வதற்கு 5 கோடி ரூபா பணம் வழங்கியதாக கோத்தபாய ராஜபக்ச மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ரவி கொலை செய்வதற்காக கருணா தரப்பிற்கு இந்தப் பணம் வழங்கப்பட்டுள்ளதாக புலனாய்வுப்பிரிவின் முன்னாள் அதிகாரி லியனாராச்சி நீதிமன்றில் தெரிவித்துள்ளார். கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே முன்னிலையில் அவர் நேற்று(வெள்ளிக்கிழமை) இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது சாட்சியமளித்துள்ள அவர், இந்த கொலை கடந்த அரசாங்கத்தின் சூழ்ச்சித்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் வசந்த ஊடாக கருணா தரப்பிற்கு பணம் வழங்கப்பட்டுள்ளது.

பிரதிப் பொலிஸ் மா அதிபர் கீர்த்தி கஜநாயக்க, அரச புலனாய்வுப் பிரிவு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டுல், கருணா தரப்பு வருண் ஆகியோருக்கு தெரிந்தே கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளப்பட்டது.

ரவிராஜை கொலை செய்யப் போவதாக வருண் என்னிடம் கூறினார் அரச புலனாய்வு தகவல் பிரிவிற்கு சொந்தமான பச்சை நிற முச்சக்கர வண்டியொன்றில் பிரசாத், விஜிர, செனவி, அஜித் போன்றவர்கள் இருந்தார்கள். வஜிரவின் கையில் கறுப்புநிற பையொன்று இருந்தது.

இந்த சம்பவம் இடம்பெற்று இரண்டு வாரங்களின் பின்னர் ரவிராஜ் கொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்டு இரண்டு வாரங்களின் பின்னர் மீளவும் தேசிய நூதன சாலைக்கு அருகாமையில் வருணை சந்தித்தேன், ரவிராஜ் கொலைக்காக கோதா 5 கோடி வழங்கினார் என அவர் என்னிடம் கூறினார் என லியனாரச்சி அபேரட்ன நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் 2006 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் திகதி நாரஹேன்பிட்டியில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பில் மூன்று கடற்படை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.