Breaking News

யுத்தக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேசத்தின் பங்களிப்பு அவசியம் - பிரித்தானியா

யுத்தக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேசத்தின் பங்களிப்பு அவசியம் என்ற நிலைப்பாட்டில் பிரித்தானியா தொடர்ந்தும் உறுதியாகவுள்ளதாக பிரித்தானியா வெளியுறவு மற்றும் பொதுநலவாயத்துறை இராஜாங்க அமைச்சர் ஹியூகோ ஸ்வையர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா வெளியுறவு மற்றும் பொதுநலவாயத்துறை இராஜாங்க அமைச்சர் ஹியூகோ ஸ்வையரின் இலங்கை விஜயம் தொடர்பில் பிரித்தானியா தொழிலாளர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Joan Ryan இனால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது பதிலளித்து அவர், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை என்பனவற்றுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம். அத்துடன், குறித்த விடயத்தில் இலங்கையிலுள்ள எமது தூதரகம் அரச அதிகாரிகளுடன் ஒரு சீரான தொடர்பிலுள்ளது.

அத்துடன், எனது இலங்கை விஜயத்தின் போது பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்குவது உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தேன். இதுதொடர்பில் இலங்கையிலுள்ள எமது தூதரகம் தொடர்ந்தும் அழுத்தங்களை பிரயோகிக்கும்.

மேலும், இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள மக்களின் காணிகள் விடுக்கப்பட்டுள்ளமையானது ஒரு முன்னேற்றகரமான செயற்பாடு ஆகும். இந்தநிலையில் தொடர்ந்தும் இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் நாம் தொடர்ந்தும் அழுத்தங்களை பிரயோகிப்போம்.

இறுதிகட்ட யுத்தத்தின் வடக்கிலே புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு பிரித்தானிய அரசாங்கம் நிதியுதவினை வழங்கியுள்ளது.

அத்துடன், எனது இலங்கைக்கான விஜயத்தின் போது நான் வடக்கிற்கு சென்று அங்கு மீள்குடியேறியுள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடியிருந்ததுடன், மக்கள் எதிர்நோக்கியுள்ள சவால்கள் தொடர்பிலும் அறிந்து கொண்டேன்.

இதேவேளை, ஐ.நா பிரேரணை தொடர்பிலான இலங்கையின் நிலைப்பாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும் ஐ.நா பிரேரணையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் பெரும் சவால்களை எதிர்நோக்கியுள்ளமையினை இலங்கைக்கான எனது விஜயத்தின் போது என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை செயற்பாடுகள் தொடர்பில் இலங்கைக்கு உதவுவதற்கு நாம் தயார். இதற்காக எமது அரசாங்கத்தினால் 6.6 மில்லியன் பவுண்ஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் டேவிட் கெமரூன் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் போது இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அளித்த வாக்குறுதிக்கு அமைவாகவே இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், யுத்தக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேசத்தின் தலையீடு அவசியம் என்ற நிலைப்பாட்டில் பிரித்தானியா தொடர்ந்தும் உறுதியாகவுள்ளது. இதுதொடர்பில் நான் எனது விஜயத்தின் போது இலங்கை அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்தியிருந்தேன். ஐ.நா தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்றுவதற்கு ஐ.நாவுடனும் சர்வதேச நாடுகளுடனும் இணைந்து பிரித்தானியா செயற்படுவது தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளருக்கு கடந்த 28 ஆம் திகதி கடிதம் மூலம் அறிவித்துள்ளேன்.

இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமை மீறல்கள் மற்றும் சித்திரவதைகள் இடம்பெறுமாயின் அதுதொடர்பில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அதுதொடர்பில் நாம் தொடர்ந்தும் அவதானம் செலுத்தி வருகின்றோம்.

அத்துடன், இலங்கையில் அதிகார பகிர்வினை வழங்கும் செயற்பாடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதிகார பகிர்வை உள்ளடக்கிய ஒரு புதிய அரசியல் வரைபு உருவாக்கப்பட்டு வருகின்றமை மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.