Breaking News

சுஸ்மாவின் கவனத்தை ஈர்க்க வடமாகாண மீனவர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

இந்திய மீனவர்களினால் இலங்கை மீனவர்கள், குறிப்பாக வடமாகாண மீனவர்கள் பாதிக்கப்படுவதை தடுப்பதற்கு இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று (வெள்ளிக்கிழமை) ஆர்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு எதிரில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டமானது கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சங்கம், வடமாகாண மீனவ கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனம், அகில இலங்கை பொது மீனவர்கள் சங்கம் ஆகியவற்றினால் நடத்தப்பட்டுள்ளது.

வடமாகாணத்தில் மீனவ தொழிலை மேற்கொள்ளும் மீனவர்கள் உட்பட தென்னிலங்கை மீனவ பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இதன்போது, இந்திய மீனவர்களுக்கு எதிரான பதாதைகளை ஏந்தியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களையும் எழுப்பனர்.

‘இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடல் வளத்தை அழித்து மீன் பிடிக்கும் இந்திய இழுவைப் படகுகளை நிறுத்துமாறும், இலங்கை மீனவர்களைப் பாதுகாக்குமாறும், கோரினர்.

அத்துடன் இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கையின் வட-பகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நேரில் கண்டறிந்து அதனை இந்திய பிரதமரிடமும், தமிழக முதல்வரிடமும் எடுத்துக் கூறவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிடைக்கவில்லையாயின் தாம், தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் போராட்டங்களை நடத்தி ஐ.நா வரைக்கும் கொண்டுச் செல்லப் போவதாகவும் எச்சரித்தனர்.