வடக்கில் 27 பாடசாலைகளை புனரமைக்கிறது இந்தியா
வடக்கில் 27 பாடசாலைகளைப் புனரமைப்பதற்கும், மட்டக்களப்பு போதனா மருத்துவமனை சத்திரசிகிச்சைக் கூடத்துக்கான கருவிகளை வழங்கவும், இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.
நேற்று கொழும்பில் நடந்த இந்திய- இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் ஒன்பதாவது கூட்டத்தில், இதற்கான முடிவு எடுக்கப்பட்டு, உடன்பாடுகளும் கையெடுத்திடப்பட்டன.
நேற்றைய கூட்டத்தில் சிறப்பு பங்காளர் உடன்பாடு ஒன்றில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜும், இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் கையெழுத்திட்டதாக, தெரிவிக்கப்படுகிறது. எனினும், அந்த உடன்பாடு பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
அதேவேளை, வடக்கு மாகாணத்தில் 27 பாடசாலைகளைப் புனரமைத்துக் கொடுப்பதற்கும், மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் சத்திரசிகிச்சைக் கூடம் மற்றும் அதற்குத் தேவையான கருவிகளை வழங்கவும் இந்தியா முன்வந்துள்ளது.
இதற்கான உடன்படிக்கைகள், இந்திய இலங்கை அதிகாரிகள் தனித்தனியாக கையெழுத்திட்டனர்.இந்த கூட்டு ஆணைக்குழுக் கூட்டத்தில் பாதுகாப்பு உத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் குறித்துப் பேசப்பட்டுள்ளன.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்க இந்திய வெளிவிவகார அமைச்சருடன் 14 பேர் கொண்ட இந்திய உயர் மட்டக்குழு நேற்று மதியம் கொழும்பு வந்தமை குறிப்பிடத்தக்கது.








