சீனாவுடன் நல்லுறவை மீண்டும் புதுப்பிக்கத் தயார் – பிரதமர் அறிவிப்பு
இலங்கைக்கும் சீனாவுக்குமிடையிலான நீண்டகால நல்லுறவை புதிப்பித்து மீண்டும் வலுப்படுத்துவதற்கு, தமது அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சீன புத்தாண்டு நாளை மறுநாள்- கொண்டாடப்படுவதை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“சீனாவின் நல்லிணக்கம், சமாதானத்துக்காக உதவுவதற்கு நாம் எப்போதும் தயாராகவுள்ளோம்.இலங்கையின் நல்லாட்சிக்கும், இலங்கையின் புதிய நல்லாட்சி அரசின் பங்களிப்புக்கும் சீனா ஆற்றிய பணிகளை நாம் மதிக்கிறோம்.
2015 ஆம் ஆண்டைப் போல், 2016 ஆம் ஆண்டும் சுபீட்சம் தரும் நல்ல ஆண்டாக அமைவதற்கு ஏற்ற வகையில் சீன அரசின் ஒத்துழைப்பை நாம் எப்பொழுதும் எதிர்பார்த்திருக்கிறோம்.இலங்கையின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அபிவிருத்திக்கென சீன அரசாங்கமும், சீன அபிவிருத்தி வங்கிகளும் குறிப்பிடத்தக்க பங்களிப்பினை வழங்கியுள்ளதை மறக்க முடியாது.
அதேபோல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டுதலின் பேரில் செயற்படும் நல்லாட்சி அரசிற்கான அனைத்துலக பங்களிப்பு அவசியமான தேவையாக காணப்படுகிறது.
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால நல்லுறவை புதுப்பித்து அதனை மீண்டும் வலுப்படுத்துவதற்கும் பேணுவதற்கும் அரசாங்கம் என்ற ரீதியில் தயாராகவே இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.








