Breaking News

போர்க்குற்றம் தொடர்பில் ஐ.நா ஆணையாளருக்கு தெளிவூட்ட பொன்சேகா முயற்சி

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசைன் இலங்கைக்க இன்று விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை அவருடன் சந்திப்பவைப்பதற்கான முயற்சிகளில் அரச உயர்மட்டம் முயற்சிசெய்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

போர்க் குற்ற விசாரணைகளை உள்ளகப் பொறிமுறையில் முன்னெடுக்க ஸ்ரீலங்கா அரசாங்கம் திட்டமிட்டு வருகின்றது.இதன் ஓரங்கமாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு இராணுவம் சம்பந்தப்பட்ட அமைச்சுப் பதவி ஒன்றை வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக தெரியவருகிறது.

இதனூடாக உள்ளக விசாரணையில் இராணுவ அதிகாரிகளும், சிப்பாய்களும் தவறிழைத்தமை கண்டறியப்பட்டால் இராணுவ உள்ளக ஒழுக்காற்று விசாரணைகளை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஊடாக மேற்கொள்ளவும் அரச உயர்மட்டம் எதிர்பார்த்திருப்பதாகவும் அறியமுடிகின்றது.

இது தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரிடம் சம்பந்தப்பட்ட பீல்ட் மார்ஷல் பொன்சேகாவே விளக்கிக்கூறுவதற்கு எதிர்பார்த்திருக்கும் நிலையில் அந்த சந்திப்பிற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் இரகசியமான முறையில் முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இதேவேளை யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பில் இந்த வருடத்திற்குள் உள்ளகப் பொறிமுறை அமைத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.