Breaking News

வடக்கு,கிழக்கில் இன்று நடத்திய போராட்டங்கள் (முழுமையான இணைப்பு)





வவுனியாவில் போராட்டம்...!!!

வவுனியா நகரசபைக்க முன்பாக பொங்கு தமிழ் தூபிக்கு முன்னால் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் வவுனியா பிரஜைகள் குழுவின் ஒத்துழைப்புடன் இடம்பெற்ற இவ் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள், வாயை கறுப்புத்துணியால் கட்டியவாறு கறுப்பு நிறக்கொடிகளையும் பதாதைகளையும் ஏந்தியவாறு உண்ணாவிரத்தில் ஈடுபட்டனர்.








காலை 10 மணிக்கு ஆரம்பமான உண்ணாவிரதப் போராட்டத்தில் சுதந்திரமில்லாத இனத்தின் பிரதிநிதி சுதந்திரதின நிகழ்வில் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் படத்தை தாங்கிய பதாதையையும்,

அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும், நாங்கள் எங்கள் சொந்த ஊருக்கு போக வழிவிடு, படித்தவனை நம்பினோம் படுகுழியில் தள்ளுகின்றான் தமிழ் இனத்தை, இராணுவமே எமது காணிகளை விட்டு வெளியேறு என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.

திருமலையில் மக்கள் போராட்டம்

திருகோணமலை மாவட்டத்தில் ஸ்ரீலங்காவின் சுதந்திர தினத்திலும் தமக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என தெரிவித்து பொது மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டம் இன்று வியாழக்கிழமை காலை ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக ஆரம்பமாகியுள்ளது.

காணாமல் போனோர், கடத்தப்பட்டோர், சம்பூர் பகுதியில் மீள்குடியேற்றப்படாதோர், குச்சவெளியில் பாதிக்கப்பட்ட மீனவர்கள், அனல் மின்நிலையத்தால் பாதிக்கப்பட்டோர், மூதூர் படுகாடு பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் திருகோணமலையில் உள்ள பொது அமைப்புக்கள் ஆகியன இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது “காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டுபிடித்து தாருங்கள்”, நாம் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவது எப்போது?“ என்ற சுலோகங்கள் அடங்கிய பதாதைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தாங்கியுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மன்னாரில் போராட்டம்...!!

சுதந்திர தினத்திலாவது தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என கோரி மன்னாரில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டம் இன்று வியாழக்கிழமை காலை முன்னெடுக்கப்பட்டது. இன்று நாடு முழுவதும் அரசியல் கைதிகள் சங்கம், காணாமல் போனோரின் அமைப்பினர், போரினால் பாதிக்கப்பட்ட அமைப்பு மற்றும் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் சுதந்திர தினத்தை புறக்கணிக்கும் நிலையிலேயே இந்த போராட்டம் இன்று மன்னாரிலும் முன்னெடுக்கப்பட்டது

இதன்போது யாழ்ப்பாணத்தில் காணாமல் போனோர் தொடர்பாக பிரதமர் தெரிவித்த கருத்தைக் கண்டித்தும்,காணாமல் போனவர்களுக்கு இறப்பு சன்றிதழ் வழங்குவதற்காக நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்த கருத்தை கண்டித்தும்,





இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகள் உள்வாங்கப்படவேண்டும் எனவும்,

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை செயற்பாடுகள் நிறுத்தப்படவேண்டும் என்பன போன்ற நான்கு அம்ச கோரிக்கைளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

குறித்த போராட்ட பேரணி மன்னார் பிரஜைகள் குழு அலுவலக வளாகத்தில் ஆரம்பமாகி மன்னார் மாவட்ட செயலகத்தை சென்றடைந்து, அங்கு வீதியின் அருகில் அமைதியான முறையில் இவர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

நிகழ்வில் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இ.செபமாலை, அதன் செயலாளர் பி.ஏ.அந்தோனி மார்க், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், தழிழரசு கட்சியின் இளைஞர் அணி செயலாளர் வி.எஸ்.சிவகரன், ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் முக்கியஸ்தரும் முன்னாள் மன்னார் நகரசபையின் உறுப்பினருமாகிய இ.குமரேஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்..!!

இலங்கையின் 68ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அதேநேரத்தில் காணாமல் போனோரின் உறவுகள் கறுப்புக்கொடி மற்றும் பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் இன்று வியாழக்கிழமை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் முன் நடைபெற்றது.

இங்கு கருத்து தெரிவித்த பெற்றோர்,

ஏழு வருடங்களாக நாங்கள் கண்ணீா வடிக்கின்றோம் எங்களது கருத்துக்களை கேட்டு எங்களது பிள்ளைகளை உறவுகளை கண்டுபிடித்து தர யாரும் முன்வரவில்லை நல்லாட்சி அரசு கூட எமக்கு திருப்திகரமான பதில் எதனையும் வழங்கவில்லை மாறாக எமக்கு நட்டஈடு பெற்றுத்தவதாக கூறிக்கொண்டிருக்கின்றனர்.

எமக்கு நட்டஈடு வேண்டாம் எமக்கு எமது உறவுகளே வேண்டும் எமது உறவுகளை எமக்கு ஒப்படைக்காவிட்டால் நாம் இந்த கச்சேரிக்கு முன்பாக வந்து குடும்பத்துடன் தற்கொலை செய்வோம் என்று தெரிவித்தனர்.

மஹிந்த ராஜபக்சவின் மகன் கைதுசெய்யப்பட்டதற்கு மகன் எங்கு இருக்கிறான்? என்று தெரிந்து கூட அந்த தாய் கண்ணீர் வடிக்கிறார் அழுது புலம்புகிறார் அதற்கு பலர் ஆதரவு வழங்குகின்றனர்.

நாங்கள் ஏழு வருடகாலமாக எமது பிள்ளைகள் உறவுகள் எங்கு இருக்கின்றார்கள் என்றுகூட தெரியாது வீதி வீதியாக கிடந்து ஆழுது புலம்புகின்றோம் அரசாங்கம் கொண்டாட்டங்களில் ஈடுபடுகின்றது நாங்கள் வீதியில் கிடக்கின்றோம் தயவுசெய்து இந்த நல்லாட்சி அரசு எமது பிள்ளைகளை உறவுகளை எம்மிடம் கண்டுபிடித்து ஒப்படைக்கவேண்டுமெனவும் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை ஜனாதிபதியின் தேர்தல் பிரசார சுண்டுப் பிரசுரத்தில் தனது பிள்ளை இருப்பதை அடையாளப்படுத்திய தாயும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர், தனது பிள்ளை தொடர்பாக ஜனாதிபதி அமைச்சர் ஒருவருக்கு கருத்து தெரிவிக்கும் போது அது எங்கு எடுத்த படமோ தெரியாது, எவ்வாறு தேடுவது என்றவாறாக கருத்து தெரிவித்துள்ளார். 

இதே ஒரு சிங்கள யுவதியாக இருந்தால் இவ்வாறு செய்வார்களா? தமிழர் என்பதால் எமக்கு இவ்வாறு செய்கிறார் எனது பிள்ளையை விரைவில் கண்டுபிடித்து ஒப்படைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது பத்துக்கு மேற்ப்பட்ட புலனாய்வாளர்கள் இவர்களை வீடியோ பதிவு செய்து அச்சுறுத்தல் வழங்கிய சம்பவமும் இங்கு அவதானிக்க முடிந்தது.

காணாமல் போன தமது உறவுகளின் நிலையறியாமல் தாம் ஒருபோதும் சுதந்திர தினத்தை கொண்டாடப் போவதில்லையென காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் நடந்த போராட்டம் ..!!

இலங்கையின் சுதந்திர தின கொண்டாட்டத்தை பகிஷ்கரித்து இன்று (வியாழக்கிழமை) கிளிநொச்சியில் காணாமல் போனோரது உறவினர்கள் கறுப்புப் பட்டி போராட்டமொன்றை முன்னெடுத்தனர். இதில் கலந்துகொண்ட காணாமல் போனோரின் உறவுகளே மேற்குறித்தவாறு தெரிவித்தனர்.

இதன்போது ‘நல்லாட்சி அரசே எமது உறவுகளை விரைவில் விடுதலை செய்’, நாட்டுக்கு சுதந்திரம் எமக்கோ கண்ணீர்-இனியும் வேண்டாம் இந்த துயரம்’ போன்ற சுலோகங்களை தாங்கிய பதாதைகளையும், காணாமல் போன தமது உறவுகளின் புகைப்படங்களையும் தாங்கியவாறு காணாமல் போனவர்களின் உறவுகள், போராட்டத்தில் ஈடுபட்டனர்.





கிளிநொச்சி காணாமல் போனோர் குடும்பங்களின் சங்கம் மற்றும் மன்னார் பிரஜைகள் குழு ஆகியன இணைந்து மேற்கொண்ட குறித்த போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


அம்பாறையில் போராட்டம்..!!

அம்பாறை மாவட்டத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் இன்று(வியாழக்கிழமை) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

அம்பாறை மாவட்டத்தில் கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் 2009 ம் ஆண்டுவரையான காலப்பகுதியில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும், இவர்கள் தொடர்பாக இதுவரை எந்தவிதமான முடிவும் தெரியவில்லை எனவும் ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் பல உறவுகள் தமது பிள்ளைகளை, கணவன்மார்களை கடந்த 2009ம் ஆண்டு பாதுகாப்பாக அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்த போதிலும் அவர்கள் தொடர்பிலும் எவ்விதமான தகவல்களும் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இலங்கையின் சுதந்திர தினமான இன்றைய தினம் நாட்டின் பல பகுதிகளிலும் காணாமல் போனவர்களின் உறவினர்களினால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.


மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் - ..!!

இலங்கையின் 68 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில் மட்டக்களப்பு நகரில் உள்ள காந்தி பூங்கா முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை 10.00மணியளவில் காந்தி சேவா சங்கத்தின் தலைவரும், தாயக மக்கள் மறுமலர்ச்சி மீட்பு பேரவையின் தலைவருமான லயன் ஏ. செல்வேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஶ்ரீனேசன்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஆகியோர் கலந்து கொண்டபோதும் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஏனய பாராளுமன்ற உறுப்பினர்கள் கிழக்குமாகாண அமைச்சர் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் எவருமே கலந்து கொள்ளவில்லை ,தமிழ்தேசியகூட்டமைப்பில் இருவர் மட்டுமே கலந்துகொண்டனர்

இதேவேளை கிழக்குமாகாண விவசாய அமைச்சர் கி.துரைராச்சிங்கம் மட்டக்களப்பு நல்லையா வீதியில் தமது காரியாலயத்தில் இலங் கையின் 68வது சுதந்தினநாளில் ஊடகவியலாளர்களையும் கட்சியின் மட்டக்களப்பு தொகுதி உறுப்பினர்களுக்கும் மதியபோசன விருந்துபசாரத்தை நடாத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



,காணாமற் போனவர்களின் மனைவிமார்,தாய்மார்,பிள்ளைகள், கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.இதன்போது "அரசே எனது பிள்ளைகளை திருப்பித்தா" , "தமிழருக்கு ஒரு நியாயமா?மற்றவர்களுக்கு வேறு நியாயமா? நீதி வேண்டும் நீதி வேண்டும் " "எனது பிள்ளை எனக்குவேண்டும்" ,"உறவுகளை உடனே மீட்டுத்தா" , "இன்னும் எங்களுக்கு ஏமாற்றம் வேண்டாம் " ,"நால்லாட்சி அரசாங்கம் ஏன் மௌனம் காத்து நிற்கின்றது" ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய எங்களுக்கு நீதி வேண்டும்" தமிழ் மக்களை ஜனாதிபதி இரண்டு கண்களையும் திறந்து பார்க்க வேண்டும் என கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கண்ணீர் சிந்தி கதறியழுதனர். நல்லாட்சி அரசாங்கம் காணாமல் போனவர்கள் விடயத்தில் கவனம் செலுத்தவேண்டும்.

எங்கள் பிள்ளைகள் இறந்துவிட்டதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்திலோ,வக்கிலோ சொல்வதை ஏற்றுக்கொள்ளமுடியாது.இந்தவிடயமாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் கருத்து தெரிவிக்கையில் இன்று நல்லாட்சிஅரசாங்கம் என்று சொல்லிக்கொண்டிக்கும் காணாமற் போனவர்களின் நிலைப்பாட்டில் ஜனாதிபதி,பிரதமர் ஆகியோர்கள் உடனடியாக கவனம்செலுத்தி காணாமற் போனவர்களை கண்டுபிடித்து கொடுக்க வேண்டும். அல்லது அவர்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்க வேண்டும்.

இன்று அவர்கள் காலிமுகத்திடலில் சுதந்திரமாக சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில் தமிழ்மக்கள் கண்ணீரையும், கம்பலையும் வாழ்நாள் பூராகவும் அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர்.உண்மையாக இவர்களுக்கு தமிழர்கள் மீது நம்பிக்கை, விசுவாசம்,இருந்தால் காணாமற் போனவர்களின் விடயத்தில் தீர்வு கொடுத்திருக்க வேண்டும். தயவு செய்து வடகிழக்கில் காணாமற் போனவர்களின் குடும்பத்திற்கு பதில் சொல்லியாகவேண்டும்.தமிழ்மக்களை சுட்டு குவித்து வெற்றி விழா கொண்டாடிய மஹிந்த ராஜபக்ஸ கண்ணீர் வடிக்கின்றார்.

இது நாங்கள் வழிபடும் இறைவனின் இறைதீர்ப்பு ஆகும்.மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலகங்களிலும் இருந்து 2200பேர் கூலிப்படைகளினாலும்,கடந்தஆட்சியாளர்களினாளும் காணாமற் போகச்செய்யப்பட்டது.இவர்கள் கடத்தப்பட்டார்களா?, காணாமற் செய்யப்பட்டார்களா? என சந்தேகம் கொள்ள வேண்டியுள்ளது.காணாமற் போன ஆணைக்குழு நல்லாட்சி அரசாங்கத்தில் காணாமற் போன குடும்பத்திற்கு என்ன செய்திருக்கின்றது.

அவர்களின் குடும்பத்திற்கு வாழ்வாதாரத்தை வழங்கியிருக்கின்றதா.இல்லை என்று தான் அனுமானம் செய்யமுடியும்.மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமற்போனவர்ககளின் குடும்பத்தார்கள் ஒன்று சேர்ந்து சுமார் 2200 விண்ணப்பங்களை காணாமற்போன ஆணைக்குழுவிற்கு விசாரணை செய்வதற்கு விண்ணப்பித்திருந்தது.இதில் 425 விண்ணப்பங்களை விசாரணை செய்தது. 1575விண்ணப்பங்கள் விசாரணை செய்யப்படவில்லை.விசாரணை செய்வதற்கு விண்ணப்பிருந்தவர்களின் விண்ணப்பங்கள் எங்கே? விசாரணை விண்ணப்பங்கள் வாக்குச்சீட்டுப்போல் குப்பைக்குள் வீசப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எங்களுக்கு எழுகின்றது.

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய தமிழர்களுக்கு மிகவிரைவில் காணாமற் போனவர் விடயத்தில் ஜனாதிபதி,பிரதமர் ஆகியோர்கள் நீதியான பொறுப்பு ,தீர்வுகள் வழங்க வேண்டும் என கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு தெரிவித்தார்.