Breaking News

விமலின் குற்றச்சாட்டிற்கு விஜயகலா மறுப்பு

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது தேசிய கொடியை ஏற்ற மறுத்ததாக தன் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

மேலும், அவ்வாறு தேசிய கொடி ஏற்ற தான் அழைக்கப்படவோ அல்லது அதற்கு மறுப்பு தெரிவிக்கவோ இல்லை என தெரிவித்த அவர், இது இனவாதத்தை தூண்டும் வகையிலான உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் தனக்கு எதிராக எழுந்துள்ள இந்த சர்ச்சை குறித்து நாடாளுமன்றத்தில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள பாடசாலை நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், குறித்த வைபவத்தில் தேசிய கொடியை ஏற்றுவதற்கு மறுப்பு தெரிவித்ததாக பல்வேறு ஊடகங்களில் செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இது தொடர்பில் ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இராஜாங்க அமைச்சரின் இந்நடவடிக்கையானது இனக் குரோதத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளதாகவும், அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் கூட்டு எதிரணியினர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.