Breaking News

நீதி அமைப்புகள் குறித்த ஐ.நா.ஆணையாளரது கருத்திற்கு மஹிந்த கண்டனம்

இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐ.நா. மனித உரிமைகள் சபை ஆணையாளர் செயிட் அல் ஹூசைன், இலங்கை நீதி அமைப்பு நம்பிக்கை மற்றும் சுயாதீனமற்றது என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நீதிமன்ற நடவடிக்கைகளில் அரசியல் தலையீடுகள் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஐ.நா. ஆணையாளரது இவ்வாறான கருத்திற்கு தனது கடும் கண்டனத்தை தெரிவிப்பதாக குறிப்பிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரது கருத்தை நிரூபிக்கும் வகையில் நீதிமன்றங்கள் செயற்பட கூடாது எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதிய அரசியல் நடவடிக்கைகள் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலகம் இன்று (வெள்ளிக்கிழமை) பத்தரமுல்லையில் திறந்து வைக்கப்பட்டது.

திறப்பு விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் மனித உரிமைகள் சபையின் நடவடிக்கைகளுக்கு அமைய இலங்கைக்கு ஒரு நீதியும், ஏனைய நாடுகளுக்கு ஒரு நீதியும் நடைமுறைப்படுத்தப்படுகின்றமை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் சுட்டிக்காட்டினார்.

மேலும், நாட்டில் ஊடக சுதந்திரம் தற்போது நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, முதன்முறையாக நாடாளுமன்றத்தில் ஊடகவியலாளர்களின் பெயர்களை குறிப்பிடும் நிலை தோன்றியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.