Breaking News

தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு அரசாங்கம் தீர்வினை பெற்றுத்தரும் - சுமந்திரன் நம்பிக்கை

தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டமையானது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இனவாதிகளினால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தலையும் மீறி நேற்றைய தினம்(வியாழக்கிழமை) இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகளின் போது தேசிய கீதம் தமிழில் இசைக்கப்பட்டது.

இந்தநிலையில் இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன், நல்லிணக்கத்திற்கான ஓர் இராட்சத நகர்வாக இந்த முனைப்பினை கருத முடியும் என தெரிவித்துள்ளார்.

இந்த விதமான அணுகுமுறைகளை நீண்ட காலமாக நிலவி வரும் தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுத்தருவதற்கு அரசாங்கம் பின்பற்றும் என தாம் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்பட்டமை ஓர் சிறிய விடமாக இருக்கக் கூடும் என்ற போதிலும், அது வலுவான கருத்தை பிரதிபலிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கும் இந்த நாட்டில் சமவுரிமை வழங்கப்படுகின்றது என்பதனை வலியுறுத்தும் வகையில் தேசிய கீதம் தமிழ்மொழியில் பாடப்பட்டதனை கருத முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.