Breaking News

சீ.எஸ்.என் தொலைக்காட்சியின் தலைவர் யோஷித – வசமாய் சிக்கிய ஆதாரங்கள்

விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ஷ, கால்டன் ஸ்போர்ஸ்ட் நெட்வேர்க் நிறுவனத்தின் தலைவர் என்பதை உறுதிப்படுத்தும் பல சாட்சி ஆவணங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தில் மேற்கொண்ட தேடுதலின் போது இந்தக் குறித்த ஆவணங்கள் கிடைத்துள்ளதாக தெரியவருகிறது.

இன்னும், இவற்றில் யோஷித்த ராஜபக்ஷ, நிறுவனத்தின் தலைவராக செயற்பட்டு பரிமாறிக்கொண்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்னஞ்சல்களும், சில குறுந்தகவல்களும் தலைவர் என்பதற்கான முகவரியுடன் கூடிய இறப்பர் முத்திரை, யோஷித்தவின் கையெழுத்துடன் கூடிய இறப்பர் முத்திரை, நிறுவனத்தின் தலைவர் என்ற வகையில் அனுப்பிய கடிதம் என்பனவும் இந்த ஆவணங்களில் அடங்குவதாக கூறப்படுகிறது.

மேலும், யோஷித்த ராஜபக்ஷ உள்ளிட்ட பணிப்பாளர் சபை மீது, போலி ஆவணம் தயார் செய்தமை, நம்பிக்கையை மீறிய குற்றம், நிறுவன சட்டத்தை மீறியமை, சுங்க சட்டத்தை மீறியமை, அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியமை உட்பட பல குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு நடடிக்கை எடுத்து வருகிறது.

அரசுக்கு சொந்தமான கட்டிடம் ஒன்றை தொலைக்காட்சி நிறுவனத்தின் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியமை, கட்டிடத்தை பெற்றுக்கொண்டமை தொடர்பில் யோஷித்த உட்பட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர்கள் தெளிவான பதில்களை வழங்கவில்லை என கூறப்படுகிறது.

இளைஞர்களுக்கான எதிர்காலம் அமைப்பினால், சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்திற்காக பிரித்தானியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாகனம் ஒன்றுக்கான உதிரிப் பாகங்களுக்காக ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 482 பவுண்களுக்கான கட்டணச்சீட்டும் தேடுதலின் போது கிடைத்துள்ளது.

அத்துடன், இது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதுடன் விசாரணைகளுக்காக நாமல் ராஜபக்ஷ விரைவில் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்படலாம் எனவும் தெரியவருகிறது.