யாழ்.பொதுநூலகத்தில் கலாமிற்கு உருவச்சிலை
யாழ்.பொதுநூலகத்தில் இந்திய முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் உருவச்சிலையினை நிறுவவுள்ளதாக இலங்கைக்கான இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஜா தெரிவித்துள்ளார்.
யாழ்.கீறின் கிறாஸ் விருந்தினர் விடுதியில் ஊடகவியலாளர்களுக்கான விருந்துபசார நிகழ்வு இன்று நடைபெற்றது. அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்திய அரசாங்கம் இங்கு பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில், யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் அப்துல்கலாம் நினைவாக பாதி உருவச்சிலையினை நிறுவவுள்ளதாக தெரிவித்தார்.
அதன்படி அப்துல்கலாமின் சிலை இந்தியாவில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற நிலையில், விரைவில் சிலை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்பட்டு யாழ்.பொதுநூலகத்தில் உள்ள இந்திய கோர்னரில் நிறுவப்படும் எனவும் குறிப்பிட்டார்.
யாழ்.பொதுநூலகத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்தியன் கோர்னர் என்ற புத்தக நிலையத்தில் 10 ஆயிரம் இந்திய புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த புத்தக நிலையத்தினை வெறும் காட்சியமாக பார்க்காமல் இதில் உள்ள புத்தகங்களை பொதுமக்கள் பாவித்துப் பயன்பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.








