Breaking News

காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரி 25 வருடங்களின் பின்னர் விடுவிப்பு

யாழ்ப்பாணம், உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்திருந்த பிரபல பாடசாலைகளான நடேஸ்வரா கல்லூரி மற்றும் நடேஸ்வரா கனிஷ்ட வித்தியாலயம் ஆகியன இன்று விடுவிக்கப்பட்டு கல்வி நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கையளிக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரி வளாகத்தில் வைத்து குறித்த கல்லூரிகள் ஜனாதிபதியினால் இன்று (சனிக்கிழமை) கல்லூரி அதிபரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

அத்துடன், வடக்கில் உயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்திலுள்ள 700 ஏக்கர் காணியும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மக்களிடம் மீள கையளிக்கப்பட்டுள்ளது.

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, தெல்லிப்பளை மற்றும் கோப்பாய் பிரதேச சபைப் பிரிவுகளில் 700 ஏக்கர் காணிகளை மக்களிடம் கையளித்ததுடன், அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற 65,000 வீடுகளுக்கான வீட்டுத்திட்டத்தினையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.

இதன்போது 12 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 620 குடும்பங்களுக்கு இன்றைய தினம் ஜனாதிபதியினால் காணிகள் மீள கையளிக்கப்பட்டுள்ளதுடன், மீளக்குடியேற்றப்பட்ட மக்களுக்கு மீள்குடியேற்ற அமைச்சினால் வழங்கப்படும் நிதியினையும் ஜனாதிபதி வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில், மீள்டியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, அங்கஜன் ராமநாதன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடமாகாணச சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும்கலந்து கொண்டனர்.

-