Breaking News

கிளிநொச்சியில் இராணுவம் -வெளியேற்றுமாறு சிறீதரன் கோரிக்கை

கிளிநொச்சி – உழவனூர் மற்றும் தம்பிராசபுரம் பகுதிகளில் இராணுவத்தினரின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்காது இழுத்தடிப்பது மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குறிப்பிட்டார்.

கிளிநொச்சி - கண்டாவளை நாதன் குடியிருப்பு மக்களுக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

உழவனூர், தம்பிராசபுரம், மயில்வாகனபுரம், குமாரசுவாமிபுரம் ஆகிய பகுதிகளில் காணிப் பிரச்சினையுள்ள மக்களுடைய காணி அனுமதிப் பத்திரங்களை பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

உழவனூர், தம்பிராசபுரம் ஆகிய பகுதிகளிலுள்ள மக்களின் காணிகளை இராணுவம் பிடித்து வைத்து, அவர்களின் தேவைகளுக்கு ஒதுக்கியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர்,அந்தப் பகுதியிள்ள மக்களுடைய காணிகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்காது இழுத்தடிப்பதானது மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார். 

காணி விவகாரம் குறித்து அரசாங்கத்தோடு கடுமையான முயற்சிகளையும் செயற்பாடுகளையும் முன்னெடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.எனவே, மக்களுக்குரிய காணி அனுமதிப் பத்திரங்களை விரைவில் பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் இன்று நாதன்வெளி குடியிருப்பு பகுதியிலுள்ள காணிப் உறுதிப் பத்திரங்களை வழங்கப்படாத மக்களுக்கு விரைவில் வழங்குவதற்கான முழு முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.