Breaking News

வடக்கில் இராணுவத்திடம் உள்ள காணிகள் விடுவிக்கப்படாது - அரசாங்கம்

வடக்கில் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான காணிகள் விடுவிக்கப்படாது என சுற்றுலா அபிவிருத்தி கிறிஸ்தவ சமய அலுவல்கள் மற்றும் காணி அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

காணி அமைச்சில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், யுத்தம் காரணமாக வடக்கில் வசித்து வந்த மக்கள் தமது சொந்த இடங்களில் இருந்து வெளியேறிய நிலையில் தற்போது வௌ;வேறான இடங்களில் தங்கியுள்ளனர்.

இந்தநிலையில் தமது காணிகளின் உறுதிப்பத்திரங்கள் உள்ளவர்களுக்கு அவர்களது காணிகள் மீள வழங்கப்பட்டு, அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள்.

மேலும் கடந்த காலங்களில் பல்வேறு வகைகளில் காணிப்பத்திரங்கள் பல பெயர்களில் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் எந்தவொரு பத்திரத்திலும் காணி உரித்து குறித்து தெளிவாக குறிப்பிடப்படவில்லை. இதன்காரணமாக இந்த காணிகளை பிள்ளைகளுக்கு எழுதவோ வியாபாரத்துக்கு பாவிக்கவோ அல்லது மேல் மாடிகளை கட்டவோ முடியாது.

இந்தநிலையில் இது தொடர்பாக ஆராய்வதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குழுவொன்றை நியமித்துள்ளார். இந்த குழு காணி தொடர்பான சட்டமூலத்தின் வரைபை தயாரித்து வருகின்றது. எதிர்வரும் மே அல்லது ஜூன் மாதமளவில் சட்டவரைபு முன்வைக்கப்படும். அப்போது அதன் நன்மையை மக்கள் அனைவரும் பெற்றுக்கொள்ளமுடியும். என தெரிவித்துள்ளார்.