Breaking News

கூட்டமைப்புடன் பேச்சு நடத்துமாறு வலிறுத்தி பிரேரணை

இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி பிரேரணை ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கூட்டமைப்புடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தையில் எடுக்கப்படும் தீர்மானங்களை புதிய யாப்பில் உள்ளடக்க வேண்டுமெனவும் அந்தப் பிரேரணையில் வலியுறுத்தவுள்ளதாகவும் கூட்டமைப்பின் உள்ளகத் தகவல்களை மேற்கோள்காட்டி தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய யாப்புக்கான முகவுரையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற விடயம் நீக்கப்பட்டிருக்கும் நிலையில் அரசாங்கத்துடன் இதுவிடயம் தொடர்பில் எவ்வாறு அடுத்தகட்டப் பேச்சு நடத்தப்படும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்

அவர் இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், 

இனப்பிரச்சினை, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணிகள் மீளக்கையளிப்பு, மீள்குடியேற்றம் போன்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தலைமையில் எட்டுபேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுமந்திரன், சிவசக்தி ஆனந்தன், சித்தார்த்தன், கோவிந்தன் கருணாகரன், செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் எம்.பி சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் புளொட் இயக்க மூத்த உறுப்பினர் ஆர்.ஆர். ராகவன் ஆகியோர் இக்குழுவில் அங்கம் வகிக்கின்றனா்.

இந்தியாவிற்கு சென்றுள்ள சம்பந்தன் இன்று செவ்வாய்க்கிழமை நாடுதிரும்புகின்ற நிலையில் இந்த வாரத்தில் இக்குழு கூடவிருக்கின்றது.

இதன்போது அரசாங்கத்துடன் இனப்பிரச்சினை தொடர்பில் பேச்சு நடத்துவது குறித்து ஆராயப்படவுள்ளது. அத்துடன் அந்த பேச்சில் என்னென்ன விடயங்கள் கலந்துரையாடப்படும் என்பது தொடர்பில் வரைபு ஒன்றும் உருவாக்கப்படவுள்ளது.

இனப்பிரச்சினை தீா்வுக்கான பேச்சில் அரசாங்கம் ஓர் இணக்கப்பாட்டிற்கு வரும் சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்தை உள்ளடக்கிய பிரேரணை ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டுவர தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமை எதிர்பார்க்கின்றது.

இந்தப் பிரேரணை மீது விவாதம் நடத்தப்படும்போது மஹிந்த ராஜபக்ச அணி எதிர்ப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் அரச, மற்றும் எதிர்தரப்பினரின் கருத்துக்களையும், நிலைப்பாட்டினையும் அறியமுடியும்.

அதற்கமைய நாடாளுமன்றத்தின் அனுமதி பெறப்பட்டால் அது இனப்பிரச்சினை தீர்விற்கு கிடைக்கும் அதிகாரம் என்று உறுதிப்படுத்தலாம் என அவர் கூறியதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.