அதிகாரப் பகிர்வை தவிர்க்க முடியாது!
அதிகாரத்தை பரவலாக்கியதால் உலகில் எந்தவொரு நாடும் பிரிந்ததில்லை. இதற்கு சிறந்த உதாரணம் அயல் நாடான இந்தியாவாகும். புதிய அரசியலமைப்பில் அதிகாரப் பரவலாக்கல் உறுதிசெய்யப்படும். இதற்கு மக்கள் கடந்த தேர்தல்களில் ஆணை வழங்கினார்கள் என்று அமைச்சரும் சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரப் பரவ லாக்கல் பலப்படுத்தப்படும். மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் அதிகரிக்கப் படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முதலமைச்சர் சம்மேளனத்தில் தெரிவித்த கருத்து தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று கேட்ட போதே,நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சரும் சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்ல இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அமைச்சர் கிரியெல்ல மேலும் தெரிவிக்கையில்,
கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் அதிகாரத்தை பரவலாக்கி நாட்டையும் மக்களையும் ஐக்கியப்படுத்தவே மக்கள் ஆணை வழங்கினர்.இந்த மக்கள் ஆணையை உதாசீனம் செய்து அரசின் பயணத்தை தொடரமுடியாது. மக்கள் வழங்கிய ஆணையை நிறைவேற்றுவது ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் பொறுப்பாகும்.
எனவே ஒற்றையாட்சிக்கு அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டு பலப்படுத்தப்பட வேண்டும். தற்போது நாம் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். இதற்காக பாராளுமன்றத்தையே அரசியலமைப்பு சபையாக மாற்றியுள்ளோம்.
எனவே அதிகார பரவலாக்கல் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தி அதனை புதிய அரசியலமைப்பில் உள்ளடக்குவோம். அதிகாரத்தை பரவலாக்குவதால் நாடு பிரியும் என்ற வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.
உலகின் பல நாடுகளில் அதிகாரம் பரவலாக்கப்பட்டதால் அந் நாடுகள் பொருளாதார, சமூக, அரசியல் ரீதியில் முன்னேற்றங்களை கண்டுள்ளன.
இதற்கு சிறந்த உதாரணம் எமது அயல் நாடான இந்தியாவாகும். எனவே நாடு பிரியும் என்பது வெறும் மாயையாகும். இதன்மூலம் நாட்டையும் மக்களையும் ஐக்கியப்படுத்த முடியும். உற்பத்திகளை அதிகரித்து பொருளாதார ரீதியான உயர்வை நாம் பெற்றுக் கொள்ள முடியும்.
அத்தோடு உலகின் மாற்றங்களுக்கேற்ப நாமும் மாற வேண்டும். அதைவிடுத்து கிணற்றுத் தவளைகளைப் போன்று பழமை விதத்தில் சிக்கிக்கொண்டிருக்கக் கூடாது. இந்த உலகமயமாக்களில் நாமும் முன்னோக்கிச் செல்ல வேண்டும்.
சர்வதேசத்தை வெற்றிகொள்ள வேண்டும். நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளான ஐ.தே.கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து இன்று தேசிய அரசு ஏற்படுத்தி முன்னுதாரணத்தை நாட்டுக்கும் வெளிநாடுகளுக்கும் காட்டியுள்ளோம்.
வெளிநாடுகள் இதனை வரவேற்கின்றன. அத்தோடு நாட்டு மக்கள் இந்த அரசுக்கு ஆணை வழங்கியுள்ளனர். எனவே மக்கள் ஆணையை மீறி செயற்பட முடியாது.
அதிகாரத்தை பரவலாக்கி நாட்டையும் மக்களையும் ஐக்கியப்படுத்த மக்கள் வழங்கிய ஆணையை உதாசீனப்படுத்த மாட்டோம்.இதனை புதிய அரசியலமைப்பில் உள்ளீர்த்து பலப்படுத்துவோம் என்றார்.








