Breaking News

ஆயுத முனையில் தமிழர்களை வெல்லமுடியவில்லை! - சிறீதரன்

கடந்த போர்க்கால சூழலில் ஆயுத முனைகளில் தமிழரை வெல்லப்படமுடியாத காரணத்தால், ஆட்சிக்கு வந்த அரசுகள் பொருளாதார யுத்தங்களை கட்டவிழ்த்து விட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி சேவைச்சந்தை கட்டிட அடிக்கல் நாட்டு வைபவம், நேற்று (புதன்கிழமை) கரைச்சி பிரதேச சபை செயலாளர் ஹம்சநாதன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய சிறீதரன்,

”நல்ல எண்ணங்களோடும் சிந்தனைகளோடும் ஆரம்பிக்கப்படுகின்ற விடயங்கள் வெற்றி பெறும், வளர்ச்சிபெறும் என்பதற்கு இது நல்ல உதாரணம். கிளிநொச்சி மாவட்டம் தனி மாவட்டம் என்பதற்கு அப்பால் ஒரு மைய பிரதேசமாக இருக்கின்ற காரணத்தால் எங்களுடைய சந்தை வித்தியாசமான வளர்ச்சியைக் காட்டவேண்டும்.

ஒரு காலத்திலே சனிக்கிழமை, புதன்கிழமைகளில் கிளிநொச்சி சந்தை களைகட்டியிருந்ததை எண்ணிப்பார்க்கிறோம். ஆனால் இப்பொழுது அவ்வாறான நாட் சந்தையை நாங்கள் காண முடிவதில்லை. ஆகவே உள்ளூராட்சி உதவி ஆணையாளர் மற்றும் கரைச்சிப் பிரதேச செயலாளரிடம், கிழமையில் ஒரு நாளாவது சந்தை நாளாக அறிவிக்கவேண்டும் என வேண்டுகொள் விடுக்கிறேன்.

கடந்த போர்க்கால சூழலில் ஆயுத முனைகளில் தமிழரை வெல்லமுடியாத நிலைமையில், அரசுகள் எம் மக்கள் மீதான பொருளாதார யுத்தங்களை கட்டவிழ்த்து பொருளாதார ரீதியில் நலிவுற்ற சமூகமாக தமிழர்கள் திகழவேண்டும் என எண்ணினர். ஆனால் அவர்களின் கனவுகளை தகர்த்தெறிந்து எமது பொருளாதார வளங்களைக் கொண்டு சிறப்பான வாழ்வியலை தமிழர்கள் மேற்கொண்டிருந்தார்கள். அதே ஆர்வத்தோடு, சவால்கள் நிறைந்த வியாபார போட்டியில் எம்மக்களின் முன்னேற்றத்திற்கு இச்சந்தைக் கட்டிடம் வழி வகுக்கும்” என்றார்.

இந்நிகழ்வில், மாகாண கல்வியமைச்சர் குருகுலராஜா, வட மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை, பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பிராபகரன், கரைச்சிப் பிரதேசசெயலக உதவித் திட்டமிடல் பணியாளர் அமல்ராஜ், கரைச்சிப் பிரதேச சபை செயலாளர் ஹம்சநாதன், அருட்பணியாளர்கள் ஜோர்ஜ் மற்றும் மௌலவி அஜ்வத், கரைச்சிப் பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் நகுலேஸ்வரன், முன்னாள் உறுப்பினர்களான சுவிஸ்கரன், சேதுபதி உட்பட கரைச்சிப்பிரதேச சபையின் பணியாளர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.