நுரைச்சோலை மின் நிலையத்தை செயற்படுத்த சீனாவின் உதவியைக் கோருகிறது இலங்கை
இலங்கையின் பிரதான மின் உற்பத்தி மையத்தைச் செயற்படுத்துவதற்கு, சீனாவின் உதவியையும் ஆதரவையும் அரசாங்கம் கோரவுள்ளதாக, பிரதி மின்சக்தி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சீன அரசாங்கத்துடன் அரசாங்கம் விரைவில் பேச்சு நடத்தும் என்று சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளார்.
‘இரண்டு மின்மாற்றிகள் வெடித்து, ஏற்பட்ட மின்சாரத் தடைகள் தொடர்பாக ஜப்பானிய, ஜேர்மனி நிபுணர்கள் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். மேலதிக ஆய்வுக்காக மாதிரிகள் ஜப்பானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அனைத்துலக மற்றும் உள்ளூர் நிபுணர்களின் இந்த விசாரணைகளின் முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்.எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நிகழாத வகையில் என்ன செய்யலாம் என்ற அட்டவணை ஒன்று தயாரிக்கப்படும்.
அதன் பின்னர், நுரைச்சோலை அனல் மின்நிலையத்தை செயற்படுத்துவதற்கான சீனாவின் ஆதரவையும், உதவியையும் கோருவதற்கான பேச்சுக்கள் நடத்தப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.








