கூர்வாளின் நிழலில் அல்ல கூர்வாளின் முனையில்
வெறும் உணர்வுக் கொந்தளிப்பின் வெளிப்பாடல்ல. தமிழினத்தின் பரிபூரண சுதந்திரத்திற்கான, இருப்புக்கான நியாயபூர்வமானதொரு போராட்டம் என்பது தமிழர்களாகத் தங்களை உணரும் ஒவ்வொருவரும் மனப்பூர்வமாக அறிந்திருக்கும் உண்மை.
அது மட்டுமல்லாது உலகத்திற்கு இது நன்கு தெரிந்த ஒரு விடயம். தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களால் தனித்துவமான நெறிகளினூடே மூன்று தசாப்தத் திற்கும் மேலாக வழிநடத்தப்பட்ட எமது விடுதலைப் போராட்டம் ஆயுத ரீதியில் மௌனிக்கப்பட்ட போதிலும், அதன் நகர்வானது அரசியல் ரீதியாக உலக ஓட்டத்திற்கு அமைவாக எடுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இவ்வேளை எமது செயற்பாடுகளுக்கு எதிரான பல கருத்துருவாக்கங்களை மேற்கொண்டு, விடுதலைப் பயணத்தைத் தடுத்து நிறுத்த மும்முரமாக முனைந்து வருகிறது ஸ்ரீலங்கா அரசு. அதன் அங்கமாகவே தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை மகளிர் பொறுப்பாளரான தமிழினியால் எழுதப்பட்டதாகக் கூறப்படும் 'கூர்வாளின் நிழலில்' எனும் நூல்வெளியீட்டு நிகழ்வும் இடம்பெற்றிருக்கின்றது.
பல உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை இந்நூலின் பல பத்திகள் சொல்கின்றன. இக்கருத்துக்களை தமிழினிதான் எழுதியிருக்கிறார் என்பது நம்பத்தகுந்த விடயமே அல்ல. சில முக்கிய கருத்துக்கள், சம்பவங்கள் தவிர்க்கப்பட்டும் உள்ளன. தமிழினி உயிருடன் இல்லாத இவ்வேளையில் இந்நூலை வெளியிடுவதன் மூலம் தாம் கொண்டுவர நினைக்கின்ற எண்ணக்கருக்களை மிக இலகுவாக உட்புகுத்தி தமிழினியை அவற்றிற்கு ஒரு சாட்சியாக்க முயன்றிருப்பது தெட்டத்தெளிவாகத் தெரிகின்றது. இச்செயற்பா டானது தமிழினி மீது சுமத்தப்பட்ட மன்னிக்க முடியாத களங்கமாகும்.
இங்கே இந்நூலின் ஆசிரியர் தமிழினியைப் பற்றிய சில விடயங்களைக் குறிப்பிடுவது சாலப் பொருத்தமானதாக இருக்கும் என நம்புகிறோம். 1991 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் தன்னை இணைத்து கொண்ட தமிழினி, 1999 ஆம் ஆண்டிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அரசில்துறைப் பொறுப்பாளராகப் பணியாற்றினார். தமிழினி மிகத் தெளிவான முற்போக்குச் சிந்தனைகளையுடைய ஒரு போராளி. எமது போராட்டம் சார்ந்த கருத்துக்களை சரியான முறையில் மக்களிடம் எடுத்துச் செல்லக்கூடிய வல்லமையுடையவர்.
பல்வேறு கருத்தரங்குகளை ஒழுங்குசெய்து தாயக விடுதலை, பெண் விடுதலை பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் விதைக்க ஏதுவாயிருந்தவர். 2009 ஆம் ஆண்டு ஆயுதப்போர் மௌனிக்கப்பட்ட போது, இராணுவத்தினரிடம் சரணடைந்து, பூசா, மற்றும் வெலிக்கடை போன்ற சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுப் பின்னர் பூந்தோட்டம் தடுப்புமுகாமில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலையானவர்.
இனி, 'கூர்வாளின் நிழலில்' எனும் நூல் பற்றிப் பார்க்கலாம். தனது சுய சரிதத்தோடு, ஒன்றிணைந்தவாறு தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றை எடுத்துச்சொல்ல முற்பட்டிருக்கிறார் தமிழினி. முன்னரே குறிப்பிட்டதுபோல் பல முரணான, பிறள்வான கருத்துக்களைத் தாங்கியுள்ளது இந்நூலின் பல பக்கங்கள். முக்கியமாக சர்வாதிகாரப் போக்கிற்கு ஒப்பானதான நடைமுறைகளைச் செயற்படுத்தி வந்தார் என எண்ணத்தோன்றும் விதமாக தமிழீழத் தேசியத் தலைவர் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்னும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுக்கு முற்றிலும் பொருத்தமில்லாத பிழையான பண்பியல்புகள் பற்றியும் சொல்கின்றன சில வாக்கியங்கள். அதாவது தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் பல நேரங்களில் ஒருவர் பற்றி இன்னொருவரிடம் விமர்சனம் செய்பவர் அல்லது தேவையில்லாத விடயங்களைப் பகிர்ந்து கொள்பவர் எனும் பொருள்படவும் சில தருணங்களில் முடிவெடுக்கும் திறனை இழந்திருந்தார் எனவும் சொல்லப்பட்டுள்ளது. இவ்வாறான பொய்மையான, ஏற்றுக்கொள்ளவே முடியாத கருத்துக்களை நிச்சயமாக தமிழினி எழுதியிருக்க மாட்டார்.
மேலும், தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தாக்குதற் திட்டங்களை வகுத்து அதனை விளக்குகின்றபோது, அதற்குச் சம்மந்தப்பட்ட தளபதிகள் மாத்திரமே கலந்து கொள்வது வழக்கம். எக்காரணம் கொண்டும் வேறு யாருமே ஒன்று கூடல்களுக்கு சமூக மளிக்க அனுமதிக்கப்படுவதில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் மிகப்பெரிய பலமே இரகசியம் பாதுகாத்தல் மற்றும் தகுந்த நேர்த்தியான திட்டமிடல்கள்மூலம் எதிரி எதிர்பார்க்காதபோது அவர்களின் போர்த்திட்டங்களை முறியடிப்பதுமாகும்.
இது இவ்வாறிருக்க தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் அல்லது மகளிர் தளபதிகளின் போர்த் திட்டங்கள் தொடர்பான சந்திப்புக்களில் தமிழினி தானும் கலந்துகொள்வதாகக் கூறியிருக்கும் கருத்தானது நகைப்பிற்குரிய விடயமாகும். எனவே இப்படி தமிழினி குறிப்பிட்டிருக்க வாய்ப்பேயில்லை. அரசியல் வேலைத்திட்டங்கள் தொடர்பான ஒருசில சந்திப்புக்களில் தமிழினி, தலைவர் அவர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வார் என்பதே உண்மை.
அத்துடன் இந்நூலைத் தொடர்ந்து வாசித்துக்கொண்டு போகுமிடத்து, தலைவர் அவர்கள் வேண்டுமென்றே ஆயுதப்போரை விரும்பி ஆரம்பித்ததான தொனிப்பே தென்படுகின்றது. விடுதலைக்காய் உயிரீந்த (50,000) ஐம்பதினாயிரத்திற்கும் மேலான மாவீரர்களின் தியாகங்கள் அர்த்தமற்றவையாகக்கப்படுவதற்கான முத்தாய்ப்பு எழுகின்றது. போரின்பாற் கொல்லப்பட்ட (200,000) இரண்டு இலட்சத் திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களின் இறப்பிற்குக் காரணமான ஸ்ரீலங்கா அரசுகளைப் பாதுகாக்கும் நோக்கமும் வெளிப்பட்டு நிற்கின்றது.
இன்னும் இந்நூலைப் பொறுத்த வரையில் பல முக்கிய பதிவுகள் வேண்டு மென்றே தவிர்க்கப்பட்டுள்ளன. உதாரணமாக இலங்கை அரசால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படும் தமிழ் பெண்களின் நிலை பற்றிய உண்மைத் தன்மைகள் மற்றும் முள்ளிவாய்க்காலில் மேற் கொள்ளப்பட்ட தமிழின அழிப்பின்போது, இராணுவத்தினரிடம் சரணடைந்த சகோதரி இசைப்பிரியாவிற்கும் சகோதரிகள் பலருக்கும் இலங்கை இராணுவம், செய்த அரக்கத்தனங்கள் பற்றி மறந்தும் குறிப்பிடப்படாதது ஏன்?
தமிழினி பொறுப்பாளராகச் செயற்பட்ட காலகட்டத்தில் அவருக்குக்கீழ் ஊடகவியற் போராளியாகச் செயற்பட்டவர் இசைப்பிரியா என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். இலங்கைச் சிறைச்சாலைகளில் இடம்பெறும் மனித உரிமைமீறல்கள், மற்றும் கடுமையான சித்திரவதைகள் பற்றிய குறிப்புக்களைக் காணவில்லை. தமிழினியின் சிறைச்சாலை அனுபவங்கள் கூட பகிரப்படவில்லை.
செஞ்சோலைப் படுகொலை தொடக்கம், நெஞ்சை உருக்கும் படுகொலைகள் ஸ்ரீலங்கா அரசின் வெறித்தனத்தை வெளிப்படுத்தி நிற்க அவற்றைப் பற்றி எந்த வொரு இடத்திலும் எழுதப்படவில்லையே. இப்படி பற்பல விலக்கல்கள், இடைச் செருகல்கள், திரிபுகள் மிக நுணுக்கமான முறையில் இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன. அதற்கான ஆதாரங்களும் எம்மிடம் உள்ளன. எனவேதான் இது தமிழினியால் எழுதப்பட்ட கருத்துக்கள் இல்லை என்பதை ஆணித்தரமாகக் கூறுகின்றோம்.
இனி இந்நூலின் வெளியீடு தொடர்பில் இருக்கின்ற குழப்பகரமான தன்மைகள் பற்றி ஆராய்தல் வேண்டியதாய் இருக்கின்றது. இந்நூலை வெளியிடுவதற்கு முழு முயற்சிகளை மேற்கொண்டவர் தமிழினியின் கணவர் ஜெயக்குமார். தமிழில் மட்டு மல்லாது ஆங்கிலம், மற்றும் சிங்கள மொழிகளிலும் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டு வெளியிடஉள்ளதாக தெரிவித்துள்ளார். 'கூர்வாளின் நிழலில்' எனும் இந்நூல் ஸ்ரீலங்கா அரசிடம் மட்டுமல்ல எம்மைத் தோற்கடிக்கப் போட்டியிடும் சில நாடுகளிடம் ஜெயக்குமார் விலைபோய்விட்டார் என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது.
பெரும்பாடுபட்டு இந்தியா, அவுஸ்ரேலியா, பிரித்தானியா, ஸ்ரீலங்கா போன்ற நாடுகளில் நூல் வெளியீட்டை நடத்தியுள்ளார்கள். இவ்வெளியீட்டு விழாக்களில் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டவர்கள் எவருக்குமே இப்புத்தகம் பற்றித் தெரிவிக்கப்படவில்லை. மாறாக கவிதைப் புத்தக வெளியீடு என்றே கூறப்பட்டிருக்கிறது. உண்மை தெரியவரவே பலர் விழாவைப் புறக் கணித்து விட்டனர். மேலும், கலந்து கொண்ட சிலரும் தமிழீழ விடுதலைப் போராட்ட எதிர்ப்பாளர்களாகவே இருப்பவர்கள் தான் என்பது தெரிகிறது.
இந்நூலானது இவ்வாண்டு வெளியிடப்படுவதற்கு இன்னுமொரு பெரிய மறைமுகமான காரணமும் உள்ளது. 2016 ஆம் ஆண்டு இலங்கையின் புதிய அரசியல் யாப்பு கொண்டுவரப்படப்போகிறது. இதன்மூலம் தமிழ்த்தேசிய வாதத்திற்கு எதிரான பல தீர்மானங்கள் வெளிவரப்போவது உறுதி, அதேநேரம் உலக வல்லரசுகள் பல இலங்கையில் கால்பதிப்பதற்காக ஒரே இலங்கைக்குள் தீர்வைத் திணிக்க முனைகின்றன.
இவற்றிற்கு வலுச்சேர்க்கும் வகையில் தமிழரின் கல்வி, கலை, பண்பாடு போன்றவற்றில் சிதைவுகளை ஏற்படுத்துவதோடு, படிப்படியான நில அபகரிப்பையும் நிகழ்த்தி வருகிறது ஸ்ரீலங்கா அரசு. இது ஒரு பாரிய வீழ்ச்சியை எமக்குக் கொண்டுவரப்போகின்றது என்பதே தற்போதுள்ள பூகோள அரசியல் சொல்லும் உண்மை. எனவே இதற்கெதிரான செயற்பாடுகளில் தமிழராகிய நாங்கள் எமது கவனத்தைச் செலுத்தாதிருக்கவும் எம்மை திசைதிருப்பவும் இவ்வாறான பிழையான கருத்துருவாக்கங்கள் தொடர்பான சம்பவங்களை முடக்கி விடப்படுகின்றன என்பதனையும் நாம் நிச்சயமாகப் புரிந்து கொள்ளவேண்டியுள்ளது. இதன் ஒரு வடிவமே இந்நூல் வெளியீடு.
மக்கள், குறிப்பாக இளையோர் சில விடயங்களை நம்பி தப்பான வழிகளைத் தேர்ந்தெடுக்காது தெளிவான சிந்தனைகளுடன் செயற்படுமாறு அன்புடன் வேண்டி நிற்கிறோம்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளாகிய நாங்கள், இந்நூல் தொடர்வில் எமது அதிருப்தியையும், எதிர்ப்பையும் இவ்வறிக்கையின்மூலம் தெரிவிக்க விளைகிறோம். இன்று எம்முடன் இல்லாத தமிழினியின் பெயரைப் பயன்படுத்தி எமது தூய்மையான விடுதலைப் போராட்டத்தை முற்று முழுதாகத் தோற்கடிக்கவும், உன்னதமான, ஒப்பற்ற தலைவரின் பால் தமிழர்கள் கொண்டிருக்கும் நல்லெண்ணத்தை உடைக்கவும் முனையும் இச்செயற்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளாகிய நாங்கள், இந்நூல் தொடர்வில் எமது அதிருப்தியையும், எதிர்ப்பையும் இவ்வறிக்கையின்மூலம் தெரிவிக்க விளைகிறோம். இன்று எம்முடன் இல்லாத தமிழினியின் பெயரைப் பயன்படுத்தி எமது தூய்மையான விடுதலைப் போராட்டத்தை முற்று முழுதாகத் தோற்கடிக்கவும், உன்னதமான, ஒப்பற்ற தலைவரின் பால் தமிழர்கள் கொண்டிருக்கும் நல்லெண்ணத்தை உடைக்கவும் முனையும் இச்செயற்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
எத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படினும் மாவீரர்களின் உயிர்த்தடங்களில், தமிழீழத் தேசித்தலைவர் அவர்களின் சிந்தனை வழியில் எமது தாயக விடுதலையை நாம் பெறுவோம் என்று உறுதி எடுத்துக் கொள்கிறோம்.
'போராட்ட வடிவங்கள் மாறலாம் போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.'
-தமிழீழத் தேசியத்தலைவர்;-
'தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்'.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் போராளிகள்.
23.03.2016
தொடர்புடைய முன்னைய செய்திகள்









