Breaking News

சிக்குமா? தி.மு.க. விரிக்கும் வலையில் பா.ம.க.

கூட்டணி சேர, தே.மு.தி.க., வராத நிலையில், தி.மு.க., தலைவர் கருணாநிதியின்கடைசி முயற்சியாக, பா.ம.க.,வுக்கு வலை விரிக்கப்பட்டு உள்ளது; பா.ம.க., சிக்குமா என்பது, அக்கட்சியின் முடிவில் உள்ளது.

கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இணைந்து பா.ம.க., போட்டியிட்டது. ஆனால், மூன்று இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. தி.மு.க., 23ல் வெற்றி பெற்றது. அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட, தே.மு.தி.க., இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்ததால், எதிர்க்கட்சி அந்தஸ்தை, தி.மு.க., இழந்தது. 

இந்நிலையில், தோல்வி கூட்டணியில் நீடிக்க விரும்பாத, பா.ம.க., விலகியது. அடுத்து நடந்த உள்ளாட்சி தேர்தலில், தனித்து போட்டியிட்டு, சரிவை சந்தித்தது. அதனால், 2014 லோக்சபா தேர்தலில், தனித்து போட்டியிடும் முடிவை .கைவிட்டு, பா.ஜ., கூட்டணியில் இடம் பிடித்தது. எட்டு தொகுதிகளில் போட்டியிட்டாலும், அன்புமணி போட்டியிட்ட தர்மபுரியில் மட்டுமே, கட்சி கரை சேர்ந்தது.

தற்போது, கூட்டணியில் சேரும்படி, பா.ஜ., விடுத்த தொடர் அழைப்பை நிராகரித்து, சட்டசபை தேர்தலை தனித்து சந்திக்க ஆயத்தமாகி உள்ளது. கட்சியின் முதல்வர் வேட்பாளராக, அன்புமணியை களமிறக்கி உள்ளதுஇப்பின்னணியில், இதுவரை, பா.ம.க.,வை பொருட்படுத்த மறுத்து வந்த, தி.மு.க., தலைமை, இப்போது மெல்ல தைலாபுரம் பக்கம் திரும்ப துவங்கி உள்ளது. தே.மு.தி.க., வராததால் ஏற்பட்டுள்ள இழப்பை சரிகட்ட, பா.ம.க., அவசியம் என கணக்கு போட்டு, ராமதாசுக்கு வலை விரித்துஉள்ளது.
தமிழகத்தின் வட மாவட்டங்களில் பலம் பெற்ற, பா.ம.க.,வை, கூட்டணியில் கொண்டு வந்தால் மட்டுமே, அ.தி.மு.க.,வை எதிர்த்து நிற்கும் பலத்தை பெற முடியும் என்ற இக்கட்டான நிலையில், தி.மு.க., இருக்கிறது. 

தே.மு.தி.க.,வை இழுக்க, எல்லா வழிகளிலும் நடத்திய, பல சுற்றுப் பேச்சு பலன் அளிக்காமல் போனதால், நொந்து போன தி.மு.க., தலைமைக்கு, பா.ம.க.,வை விட்டால் வேறு கட்சி இல்லை. அதனால், கூட்டணி வியூகத்தின் இறுதிச் சுற்றாக, கருணாநிதியின் கடைசிமுயற்சியாக, பா.ம.க.,வுக்கு வலை விரித்துள்ளனர். அந்த வலையில், பா.ம.க., சிக்குமா என்பது தான் தெரியவில்லை. முன்னாள் எம்.பி.,ரகசிய பேச்சு!தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:லோக்சபா தேர்தலில், யாரும் எதிர்பாராத வகையில், அ.தி.மு.க., 42 சதவீத ஓட்டுகளை பெற்று, 37 இடங்களில் வெற்றி பெற்றது. தி.மு.க., 24 சதவீத ஓட்டுகளில் சுருங்கியது; ஒரு எம்.பி., கூட கிடைக்கவில்லை.அதனால், பலம் வாய்ந்த கூட்டணி அமைந்தால் தான், ஆட்சியை பிடிக்க முடியும். 

காங்கிரஸ் வந்துள்ளதால், தென் மாவட்டங்களில், கூட்டணி பலம் கிடைக்கும். வட மாவட்டங்களில் என்ன செய்வது? பா.ம.க., வந்தால் தான் உண்டு என்ற நிலைமை. அதனால், கருணாநிதியே நேரடியாக களத்தில் இறங்கி உள்ளார்.அவரது அனுமதியுடன், தி.மு.க.,வில் உள்ள வன்னியர் சமூக முன்னாள் எம்.பி., ஒருவரும், ஸ்டாலினுக்கு நெருக்கமான தொழிலதிபர் ஒருவரும், பா.ம.க.,விடம் பேசி வருகின்றனர்.துணை முதல்வர், ஆட்சியில் பங்கு தவிர, பா.ம.க.,வின் மற்ற நிபந்தனைகளை ஏற்க, தி.மு.க., தயாராக உள்ளது. இவ்வாறு தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.