கறார் காட்டிய ஸ்டாலின் - கம்பி நீட்டிய விஜயகாந்த்!
45-க்கு மேல் தர முடியாது...
“‘நானே ராஜா நானே மந்திரி’ என தன் படத்தின் டைட்டிலைப் போலவே கூட்டணிக்கு ராஜாவாகிவிட்டார் விஜயகாந்த். முதல் மந்திரி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுவிட்டார்’’ என்றபடியே என்ட்ரி ஆன கழுகார், டேபிளில் இருந்த தே.மு.தி.க - மக்கள் நலக் கூட்டணி மேட்டரைப் படித்துவிட்டுப் பேச ஆரம்பித்தார்.
‘‘ ‘பழம் நழுவிக் கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் பாலில் விழும்’ என்றார் கருணாநிதி. ‘பழம் பாலில் விழுந்தாலும் சரி... காலில் விழுந்தாலும் சரி’ என தமிழிசை ரைமிங் பாடினார். விஜயகாந்த்தோ தனித்துப் போட்டி எனச் சொல்லி முற்றுப்புள்ளி வைத்தாலும்கூட விஜயகாந்த்தை சுற்றியே அரசியல் நகர்ந்து கொண்டிருந்தது. விஜயகாந்த் கூட்டணிக்கு வருவார் என கருணாநிதி சொல்லிக் கொண்டே இருந்தார். பி.ஜே.பி பக்கம் போவாரா... மக்கள் நலக் கூட்டணியோடு சேருவாரா என பட்டிமன்றம் நடந்துகொண்டிருந்த நேரத்தில் மக்கள் நலக் கூட்டணியோடு கை குலுக்கிவிட்டார். பி.ஜே.பி., மக்கள் நலக் கூட்டணி கட்சிகளோடு வெளிப்படையாகப் பேச்சுவார்த்தை நடத்தியது போல, தி.மு.க-வோடு விஜயகாந்த் பேச்சு வார்த்தைகள் நடத்தவில்லை. அதேநேரத்தில் இரண்டு தரப்பும் மறைமுகமாகப் பேசிக்கொண்டுதான் இருந்தன.’’
‘‘ம்.’’
‘‘தொகுதி ஒதுக்கீட்டில் காட்டிய பிடிவாதம்தான் தி.மு.க-வோடு சேராமல் மக்கள் நலக் கூட்டணியில் தே.மு.தி.க சேர்ந்தது. தேர்தல் ஜுரம் ஆரம்பித்த காலத்தில் இருந்தே தி.மு.க., தே.மு.தி.க தொண்டர்கள் உற்சாகமாகத்தான் இருந்தார்கள். அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடர்பாகக் கருணாநிதியை அவரது வீட்டில் விஜயகாந்த் சந்தித்த பிறகு தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க இணையும் என்கிற நம்பிக்கை பலமாக எழுந்தது. சட்டசபையில் தே.மு.தி.க எம்.எல்.ஏ-க்கள் சிலர் அனுமதிக்கப்படாமல் இருந்ததையும் தி.மு.க கண்டித்தது. இதனால் இரண்டு கட்சிகளின் தொண்டர்கள், நிர்வாகிகள் மனதளவில் ஒன்றிப் போயிருந்தார்கள். கிட்டத்தட்ட தேர்தல் வேலைகளுக்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தனர். விஜயகாந்த் மைத்துனர் சுதீஷும்கூட அதே மூடில் இருந்தாராம். ஆனால், பிரேமலதா மட்டும் தி.மு.க-வோடு கூட்டணி வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்தார்.’’
‘‘ஓஹோ?’’
‘‘காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி அதிகாரபூர்வமாக அறிவிக்கப் பட்ட அன்றுகூட கருத்துச் சொன்ன பிரேமலதா, ‘இந்தக் கூட்டணி பற்றிச் சமூக வலைதளங்களில் பாதகமான கருத்துக்கள் வருகின்றன’ என நெகட்டிவாக கருத்துச் சொன்னார். ஆனாலும்கூட தி.மு.க தொடர்ந்து முயற்சித்து வந்தது. தி.மு.க-வின் தூதுவர்களாகச் செயல்பட்ட வர்களின் விஷயத்திலேயும் விஜயகாந்த் முகம் சுளித்தாராம். ஸ்டாலின் மருமகன் சபரீசன் போன்றவர்கள்தான் பேச்சுவார்த்தைக்குப் போயிருக் கிறார்கள். ‘தி.மு.க-வின் சீனியர்கள் பலர் இருக்க இந்த ஜூனியர்களுக்கு என்ன அரசியல் வரலாறு தெரியும்?’ என விஜயகாந்த் வருத்தப்பட்டி ருக்கிறார். ஆனாலும் பேச்சுவார்த்தை இருதரப்பிலும் நடத்தப்பட்டிருக்கிறது.’’
‘‘பின்னணியைச் சொல்லும்.”
‘‘கடந்த அ.தி.மு.க கூட்டணியில் 41 இடங்கள் தரப்பட்டன. இப்போது 45 இடங்கள் தருவதாக தி.மு.க தரப்புச் சொல்லியிருக்கிறது. ‘45-க்கும் மேல் தரமுடியாது’ என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருந்தார். அதைத்தான் மீடியேட்டர்கள் விஜயகாந்த் தரப்பிடம் சொல்லியிருக்கிறார்கள். கடந்த தேர்தலைவிட அதிக இடங்கள்தான், ஒப்புக்கொள்ளுங்கள் என விஜயகாந்த்திடம் சொல்லி இருக்கிறார்கள். ‘கடந்த தேர்தலில் காங்கிரஸுக்கே 63 சீட் கொடுத்த தி.மு.க ஏன் அந்த அளவுக்காவது எங்களுக்குக் கொடுக்க முடியாதா? காங்கிரஸைவிட நாங்கள் எந்தவகையில் குறைந்தவர்கள்’ என்று டென்ஷன் ஆனாராம் விஜயகாந்த். அதற்கு தி.மு.க தரப்பில் இருந்து எந்த ரியாக்ஷனும் இல்லையாம்.
‘பெரிய வாக்கு வங்கி இல்லாத காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகளை ஒதுக்கினீர்கள். இதற்காகக் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்தபோது கடைசியாக 58 இடங்கள் வரை தர தி.மு.க ஒப்புக்கொண்டு அதற்கு மேல் தர முடியாது என காங்கிரஸிடம் கறார் காட்டினீர்கள். அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் அமைச்சரவையில் இருந்து தி.மு.க விலகப் போவதாக அறிவித்தது. தி.மு.க அமைச்சர்களும் ராஜினாமா கடிதங்களைத் தரப் போவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் 63 தொகுதிகளை காங்கிரஸுக்கு ஒதுக்கி சரண்டர் ஆனது தி.மு.க. அந்த அளவுக்கு நாங்கள் கறார் காட்டவில்லை. 59 சீட்கள் தாருங்கள் என்றுதான் கேட்கிறோம்’ என விஜயகாந்த் தரப்பு பதில் அனுப்பியது.’’
‘‘ம்.’’
‘‘இப்படி பேச்சுவார்த்தைகள் போய்க் கொண்டிருந்தபோது இடையில் பழ.கருப்பையாகூட பேட்சிங் செய்ய ஒரு முயற்சியில் இறங்கினார். அதே நேரத்தில், விஜயகாந்த் வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கேள்விப்பட்ட ஸ்டாலின் முகம்சுளித்தார்.
இப்படித்தான் ஸ்டாலின், விஜயகாந்த் இடையே அரசியல் ரீதியான விரிசல் ஆரம்பித்ததாம். ஒரு கட்டத்தில் 50 சீட்கள் வரையில் தி.மு.க இறங்கிவந்தது. ஆனாலும், அதற்கு விஜயகாந்த் பிடிகொடுக்கவில்லை. ‘59 சீட்டுக்கும் கீழே இறங்கி வர முடியாது’ என விஜயகாந்த் உறுதியாக இருந்தார். அதோடு கூட்டணி ஆட்சி என்பதையும் பேச்சுவார்த்தையில் ஒரு நிபந்தனையாக விஜயகாந்த் தரப்பில் வைத்திருக்கிறார்கள்.
ஆனால், அதை தி.மு.க ஏற்றுக்கொள்ளவே இல்லை. கூட்டணி ஆட்சி பற்றிப் பேசப்பட்டிருக்குமா எனப் பலருக்கும் சந்தேகம். அதை உண்மை ஆக்குவதுபோல திருச்சியில் நடந்த தி.க மாநாட்டில் பங்கேற்கப் போன ஸ்டாலின் பத்திரிகையாளர்களிடம் ‘தேர்தலில் வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி அமைக்க மாட்டோம்’ எனச் சொல்லியிருக்கிறார். இதுவும் விஜயகாந்த் வைத்த டிமாண்ட் என்பது முக்கிய நிர்வாகிகளுக்குப் புரிந்துபோனது. மக்கள் நலக் கூட்டணியோடு விஜயகாந்த் கூட்டணி அமைத்திருக்கிறார். கூட்டணி ஒப்பந்தம் போட்ட பிறகு பேசிய விஜயகாந்த், ‘கூட்டணி ஆட்சிதான் அமைப்போம்’ எனச் சொல்லியிருக்கிறார்.’’
‘‘ஓஹோ?’’
‘‘தி.மு.க - தே.மு.தி.க பேச்சுவார்த்தையின்போது ‘ஓரளவுதான் அட்ஜெஸ்ட் செய்யமுடியும்’ என ஸ்டாலின் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. அதன்பிறகு, கலாநிதி மாறன் சுதீஷிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அது வெற்றிபெறும் என்று கருணாநிதி முழுமையாக நம்பினார். அதனால்தான், பழம் விரைவில் பாலில் விழும் என்று மீண்டும் உறுதியாக அறிவித்தார். ஆனால், பயன் ஏற்படவில்லை.
அதன்பிறகுதான் ‘தனித்துப் போட்டி’ என்கிற முடிவை விஜயகாந்த் அறிவித்தார். இரண்டு விஷயங்களை சுட்டிக்காட்டி தி.மு.க அணியில் சேரும் மூடில்தான் விஜயகாந்த் இருந்தார் எனச் சொல்கிறார்கள் சிலர். சில நாட்களுக்கு முன்பு திடீரென கேப்டன் டி.வி-க்கு மட்டும் விஜயகாந்த் பேட்டி கொடுத்தார். அதில் ‘கருணாநிதி மூத்த அரசியல்வாதி. அவரை வரம்பு மீறிப் பேசக் கூடாது’ எனச் சொன்னார். ‘தனித்துப் போட்டி’ என்ற அறிவிப்பை வெளியிட்ட மகளிர் தின பொதுக்கூட்டத்தில்கூட தி.மு.க-வை விஜயகாந்த் விமர்சிக்கவில்லை எனச் சொன்னார்கள்.’’
‘‘ம்.’’
‘‘ ‘இறுதியாக 50 சீட் மட்டுமே தர முடியும் அதற்கு மேல் இல்லை’ என தி.மு.க சொல்லிவிட்டது. ஆனாலும் கூட்டணி ஆட்சி என விஜயகாந்த் வைத்த நிபந்தனைதான் விரிசலுக்கு முக்கியக் காரணமாக அமைந்துவிட்டதாம். இதன்பிறகும் தே.மு.தி.க-விடம் பேச வேண்டாம் என ஸ்டாலின் கதவுகளை அடைத்துவிட்டார். கடந்த வாரம் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில்கூட தனது எண்ண ஓட்டத்தைத் தெளிவுபடுத்தினார்.
தி.மு.க-வோடு கூட்டணி சேரும் நினைப்பில் இருந்த விஜயகாந்த், வேறு வழியில்லாமல் மக்கள் நலக் கூட்டணியோடு சேர்ந்துவிட்டார். தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க-வை விஜயகாந்த் சீண்டினால் திரைமறைவில் நடந்த பேச்சுவார்த்தைகளின் விவரங்களை வெளியிடவும் தி.மு.க-விடம் திட்டம் இருக்கிறதாம்.’’
‘‘பிரசாரம் களைகட்டும்போல?’’
‘‘டிசம்பர் 23-ம் தேதிதான் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் விஜயகாந்த்தை அவரது அலுவலகத்தில் சந்தித்தார்கள். அதன்பிறகு மார்ச் 23-ம் தேதி கூட்டணி ஒப்பந்தம் போடப்பட்டது. சரியாக 92 நாட்கள் விஜயகாந்த் போக்குக் காட்டி சஸ்பென்ஸுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்’’ என்றவர் அடுத்த மேட்டருக்கு தாவினார்.
‘‘ஜெயேந்திரரின் சஹஸ்ர சந்திர தரிசன விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என காஞ்சி மடத்தின் மூலம் மோடி, அமித்ஷாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மோடி மிஸ்ஸிங் ஆனாலும் 23-ம் தேதி சென்னை விழாவில் அமித்ஷா ஆஜர் ஆனார். விழாவில் பேசிய அமித்ஷா, ‘பழைமைவாய்ந்த காஞ்சி மடத்தின் ஜெயேந்திரரை நான் மட்டும் அல்ல; குஜராத் மக்களும் நன்கு அறிவார்கள். குஜராத்துக்குப் பலமுறை வந்துள்ள அவர், குஜராத்தில் இரு சமூகத்தினரிடையே நடைபெற்ற மோதலை முடிவுக்குக் கொண்டுவந்தவர்.
ஆனால், அவர் மீது அரசியல் நோக்கில் வழக்குப் போடப்பட்டு சிக்கலை ஏற்படுத்தியபோது ஒட்டுமொத்த நாடும் பொங்கி எழுந்து அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். குஜராத் அமைச்சராக இருந்த நானே, தர்ணாவில் ஈடுபட்டேன் என்றால் அதன் வீரியத்தை நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள். உண்மையை எப்போதும் மறைக்க முடியாது. இந்தப் பிரச்னையில் இருந்து இவர்கள் சட்டரீதியாக வெளியே வருவார்கள் என்று நாங்கள் நினைத்ததுபோலவே இவர்கள் வந்துவிட்டார்கள்.
இவர்களைப் போன்ற ஆன்மிகத் தலைவர்கள் பணியும், தொண்டும் தேவையாக உள்ளது. இவர் 100 ஆண்டுகள் வாழ்ந்து சனாதன தர்மத்துக்கும், சமுதாயத்துக்கும் வழிகாட்டியாகத் திகழ வேண்டும்’ என்றார். அ.தி.மு.க அரசுதான் ஜெயேந்திரர் மீது வழக்குத் தொடுத்தது. தமிழகத் தேர்தல் நேரத்தில் இந்த விவகாரத்தைக் கிளறியிருக்கிறார் அமித்ஷா.’’
‘‘ஜெயேந்திரர் என்ன சொன்னார்?’’
‘‘ஜெயேந்திரர் பேசும்போது, ‘குஜராத்துக்கு நான் யாத்திரை சென்றபோது அங்கு அமைச்சராக இருந்த மோடி, அந்த யாத்திரையில் பல இடங்களுக்கு என்னுடன் வந்தவர். அங்கு அமைச்சராக இருந்து முதல்வராக உயர்ந்து இந்த நாட்டின் பிரதமராக இருப்பவர் மோடி. அவரை போன்ற தலைவர் இந்த நாட்டுக்குக் கிடைத்த பொக்கிஷம். எங்களுக்கு ஒரு பிரச்னை வந்தது. இப்போது எங்களைக் கடந்து போய்விட்டது. கர்மாதான் அனைவரின் செயலுக்கும் காரணமாக அமைந்துவிடுகிறது. நல்ல எண்ணம்தான், நல்ல செயலை உருவாக்கும். ஆகையால், எண்ணங்களை நல்லதாக நினையுங்கள்’ என்றார். ஜெயேந்திரர் தமிழில் பேசியதை அமித்ஷாவுக்கு இந்தியில் மொழி பெயர்த்தார் விஜயேந்திரர்’’ எனச் சொல்லி ஜூட் விட்டார் கழுகார்.
பதவியைப் பாதுகாக்க தீக்குண்டம்!
சுற்றுச்சூழல் துறை அமைச்சரான தோப்பு வெங்கடாச்சலம் பண்ணாரி அம்மன் கோயிலில் தீக்குண்டம் இறங்கியிருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமியின் விசுவாசியான தோப்பு வெங்கடாச்சலம் பெருந்துறை தொகுதியில் போட்டியிட்டு வென்றார். செங்கோட்டையனால் நல்ல நிலைக்கு வந்ததும் செங்கோட்டையனையே எதிர்க்கத் தொடங்கியவர் தோப்பு. இந்த நிலையில், தேர்தலில் மீண்டும் பெருந்துறை தொகுதியில் போட்டியிட விருப்பமனுக் கொடுத்திருக்கும் தோப்புக்கு தொகுதியில் பெரும் எதிர்ப்பு இருக்கிறது. எனவே, ஈரோட்டில் இருக்கும் கிழக்கு, மேற்குத் தொகுதிகளில் ஒன்றில் சீட் வாங்க வேண்டும் என்பது தோப்பின் கணக்கு. இதற்காகக் கடந்த திங்கள் இரவு பண்ணாரி அம்மன் கோயிலில் தீக்குண்டம் இறங்கியிருக்கிறார். சமீபத்தில் நாமக்கல்லில் இருக்கும் ஆஞ்சநேயர் கோயிலுக்கு சசிகலா வந்துபோனார். அந்தக் கோயிலுக்கும் தோப்பு சென்றுவந்தார்.
திருப்பூர் எம்.பி-யான சத்தியபாமாவின் கணவர் வாசு, எனது மனைவி என்னைவிட்டுவிட்டு கோபிச்செட்டிப்பாளையம் நகரச் செயலாளரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறார் என்றும், இதுகுறித்து ஜெயலலிதாவிடம் புகார் கூற இருப்பதாகவும் அதிரடித்தார்.
இது சம்பந்தமான உரையாடல் வாட்ஸ்அப்பிலும் ரகளை கட்டியது. இந்த களேபரம் அடங்குவதற் குள்ளாக தூத்துக்குடி சசிகலாபுஷ்பா, தன் நண்பருடன் செல்போனில் பேசிய உரையாடல் வாட்ஸ்அப்பில் வந்தது. எங்கே சசிகலாபுஷ்பாவோடு, நம்மையும் கார்டனுக்கு அழைத்துவிடுவார்களோ என நடுங்கிப் போனார் சத்தியபாமா. தோப்பு வெங்கடாச்சலத்தைத் தொடர்ந்து இவரும் பண்ணாரி அம்மன் கோயில் தீக்குண்டத்தில் இறங்கியிருக்கிறார். மொத்தத்தில் அம்மாவை நம்புவதைவிட அம்மனை நம்பத்தொடங் கியிருக்கிறார்கள் அ.தி.மு.க-வினர்.
அரசியல் ஆகும் ஆணவக் கொலைகள்!
உடுமலைப்பேட்டையில் சாதி வெறியர்களால் கொல்லப்பட்ட சங்கர் விவகாரம் தமிழகம் முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளன. பல்வேறு தமிழர் அமைப்புகளும் இதற்கு எதிரான போராட்டத்தைத் தீவிரமாக முன்னெடுத்து உள்ளன. கடந்த செவ்வாய்க் கிழமை தமிழக விடியல் கட்சி சார்பில் சென்னையில் சாதிய ஆணவக் கொலைகளை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக விடியல் கட்சி ஒருங்கிணைப்பாளர்கள் டைசன் மற்றும் இளமாறன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் பொழிலன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் பகலவன், தமிழ்ப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் நாகை திருவள்ளுவன், அம்பேத்கர் புரட்சி முன்னணியின் தலைவர் துரைராஜ், தமிழ் இளைஞர் மற்றும் மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் போன்ற பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சார்ந்தவர்களும் பங்கேற்றனர்.
2 ஆண்டுகளுக்குப் பின் கருணாநிதி - மு.க.அழகிரி சந்திப்பு
2014 மார்ச் 25-ம் தேதி, தி.மு.க-வில் இருந்து, மு.க.அழகிரி நிரந்தரமாக நீக்கப்பட்டார். “நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட பணம் வாங்கிக்கொண்டுதான், தி.மு.க-வில் சீட் கொடுக்கப்பட்டது. தி.மு.க-வின் சொத்துக்களை மு.க.ஸ்டாலின் அபகரிக்க முயல்கிறார்” என்று குற்றம்சாட்டியதற்காக, கட்சியில் இருந்து அழகிரி நீக்கப்பட்டார். அதற்குப்பிறகு, கடந்த இரண்டு ஆண்டுகளாக அழகிரி கருணாநிதியைச் சந்திக்கவில்லை. அழகிரியும், ஸ்டாலினும் முட்டிக்கொள்வதும் கலைஞர் சமாதானப் படுத்துவதும் தி.மு.க-வுக்குப் புதிதல்ல. இந்த சமாதானப் படலத்தை முதலில் தொடங்குபவர் தயாளு அம்மாளாகத்தான் இருக்கும். ஆனால், இந்த முறை அழகிரியின் மகள் கயல்விழி 23-ம் தேதி கலைஞரை சந்தித்திருக்கிறார்.
‘அப்பாவின் கோபத்துக்கு சித்தப்பாதான் காரணம். சித்தப்பாவுக்குக் கட்சியை ஜெயிக்க வைக்க வேண்டும் என்கிற எண்ணம் இல்லாமல் இருக்கிறது. அவரின் நோக்கமே கட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதுதான். இப்போது அப்பாவைக் கட்சியில் இருந்து ஓரங்கட்டியது போல் இன்னும் கொஞ்சநாளில் அத்தை (கனிமொழி)யையும் ஓரம் கட்டிவிடுவார்.
இப்போது கூட்டணி அமையாமல் போனதற்கும் சித்தப்பாதான் காரணம். கூட்டணிக்குத் தயாராய் இருந்த விஜயகாந்த், சரத்குமார் ஆகியோரை கிண்டலடித்துப் பேசியதால்தான் அவர்கள் வேறு திசைநோக்கிச் சென்றிருக்கிறார்கள். எனவே, இந்த நேரத்தில் நாம் ஒன்றாக இருந்தால் மட்டுமே தேர்தலை எதிர்கொள்ள முடியும்’ என அழுதாராம். இதைத் தொடர்ந்துதான் 24-ம் தேதி அழகிரி - கலைஞர் சந்திப்பு நடந்தேறியிருக்கிறது. இருவரும் சுமார் ஒண்ணரை மணிநேரம் பேசியதாகவும், தென் மாவட்டங்களில் கட்சியை வெற்றிபெற வைப்பது தொடர்பாகப் பேசினார்கள் என்றும் சொல்கிறார்கள்.
தென் மாவட்டங்களில் கனிமொழிக்குச் செல்வாக்கு இருக்கிறது. எனவே, இருவரும் சேர்ந்தே தென் மாவட்டங்களில் தேர்தல் வேலையைப் பாருங்கள் என கலைஞர் சொல்லியிருக்கிறாராம். அதற்கு அழகிரியும் ஓ.கே சொல்லி சென்றிருக்கிறாராம். விரைவிலேயே அழகிரியை கட்சியில் சேர்த்து, அவருக்குரிய அங்கீகாரம் வழங்கப்படும் என்கிறார்கள்.








